கூத்தாநல்லூர்: குடிசைப் பகுதிக்கு பட்டா வழங்காததால் 300 குடும்பங்கள் தவிப்பு

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகராட்சிக்குள்பட்ட குடிசைப் பகுதியில் பட்டா வழங்கப்படாததால்,300 குடும்பங்கள் 70 ஆண்டுகளாக தவித்துக் கொண்டிருக்கிறார்கள். 
கூத்தாநல்லூரில் பட்டா வழங்கப்படாத பாதிக்கப்பட்ட வீடுகள் .
கூத்தாநல்லூரில் பட்டா வழங்கப்படாத பாதிக்கப்பட்ட வீடுகள் .

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகராட்சிக்குள்பட்ட குடிசைப் பகுதியில் பட்டா வழங்கப்படாததால்,300 குடும்பங்கள் 70 ஆண்டுகளாக தவித்துக் கொண்டிருக்கிறார்கள். 

கூத்தாநல்லூர் நகராட்சி ரஹ்மானியாத் தெரு கடைசிப் பகுதி, நேருஜி சாலையில் வாய்க்காக்கரை, மேல் பள்ளி லைனில் அண்ணா காலனி உள்ளிட்ட இடங்களில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு பட்டா வழங்கப்படவில்லை.

இது குறித்து, நகரமன்ற முன்னாள் உறுப்பினர் எஸ்.எம். சமீர் கூறியது: நகராட்சிக்குள்பட்ட ரஹ்மானியத் தெரு, மேலப்பள்ளி மற்றும் நேருஜி சாலை உள்ளிட்ட மூன்று இடங்களிலும், 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. 
இந்த இடத்தில், இவர்கள் 75 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறார்கள். ஏழை, எளிய மிகவும் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பவர்கள்தான் இங்கு வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை.

மேலும், இப்பகுதியில், குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் வயதானவர்கள் என 2000-க்கும் மேற்பட்டவர்கள் வாழ்கிறார்கள். இவர்கள் அனைவரும், தங்களது வீடுகளுக்குச் சென்று வர, குறைந்தபட்சம் சாலை வசதிகள்  கூட கிடையாது. கரடு, முரடான பாதைதான். சரியாகச் சொல்லப் போனால், இருச்சக்கர வாகனங்கள் கூட இவ்வழியே செல்ல முடியாத அளவிற்கு பாதை உள்ளன. அவசர அவசியமாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டுமானால் கூட இப்பகுதி மக்கள் சொல்ல முடியாத துன்பத்திற்கு ஆளாகின்றனர்.

முட்புதர்களால் மண்டிக் கிடக்கும் வாய்க்கால் ...

அருகில் ஓடக்கூடிய வாய்க்கால்களில், மழைக் காலங்களில், மழைத் தண்ணீர் நிரம்பி, வீட்டிற்குள்ளும் குடியிருக்கும் அவல நிலை ஏற்படும். மேலும், தவளை, தேள், கதண்டு, பாம்பு, பூரான் உள்ளிட்ட உயிரைக் கொல்லும் பல்வேறு விஷச் சந்துகளும் வீட்டிற்குள் படையெடுக்கும். இவைகள் அனைத்தையும் எதிர்த்துதான் இப்பகுதி மக்கள் இங்கு வாழ்ந்து வருகிறார்கள். 

இந்த பகுதி மக்களுக்கு பட்டா வழங்கினால், நகராட்சி நிர்வாகம் சாலை வசதி ஏற்படுத்தித் தருவார்கள். லெட்சுமாங்குடி வெண்ணாற்றில் பிரிந்து, நேருஜி சாலை, வாய்க்காக்கரை வழியாக பணங்காட்டாங்குடி பகுதி விவசாயத்திற்கு செல்லும் இந்த பாசன வாய்க்காலில், இதுவரை தூரும் எடுத்ததில்லை. வாய்க்காலில் மண்டிக் கிடக்கும் காட்டாமணி, முட்புதர்கள் என எதுவும் இதுவரை அகற்றப்படவில்லை.

தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், மாவட்ட ஆட்சியர் த .ஆனந்த் உள்ளிட்டோர், பாதிக்கப்பட்ட இந்த இடங்களை நேரில் வந்து பார்வையிட்டு, இப்பகுதி மக்களுக்கு பட்டா வழங்கிட வேண்டும். வாய்க்காக்கரை பாசன வாய்க்காலை சுத்தம் செய்ய வேண்டும் என இப்பகுதி வாழ் ஏழை,எளிய மக்களின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என்றார். 

இது குறித்து கூத்தாநல்லூர் வட்டாட்சியர் மகேஸ்குமார் கூறியது. நேரில் இடங்களை ஆய்வு செய்து, பட்டா வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com