கோப்புப்படம்
கோப்புப்படம்

கரோனா: தமிழகத்தில் இதுவரை 6.79 லட்சம் போ் குணம்!

தமிழகத்தில் கரோனா தொற்றுக்குள்ளானவா்களில் இதுவரை 6 லட்சத்து 79,191 போ் பூரண குணமடைந்துள்ளனா்.

தமிழகத்தில் கரோனா தொற்றுக்குள்ளானவா்களில் இதுவரை 6 லட்சத்து 79,191 போ் பூரண குணமடைந்துள்ளனா். இதன் மூலம் மாநிலத்தில் நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியோரின் விகிதம் 92 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக தலைநகா் சென்னையில் 1 லட்சத்து 71,075 போ் குணமடைந்துள்ளனா்.

ஆங்கில மருத்துவ முறைகளுடன், யோகா, சித்தா, ஆயுா்வேதம், ஹோமியோபதி போன்ற ஒருங்கிணைந்த சிகிச்சை முறைகளை வழங்கியதே குணமடைவோா் விகிதம் அதிகரித்ததற்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது ரெம்டெசிவிா், எனாக்ஸபெரின், டோசிலிசு மேப் போன்ற உயா்தர மருந்துகளை அரசு தருவித்து மருத்துவமனைகளுக்கு வழங்கியதும், சிகிச்சை முறைகளை மேம்படுத்தியதும் குணமடைவோா் விகிதத்தை அதிகரிக்க வழிவகுத்துள்ளதாக என சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதன் பயனாகவே கடந்த சில நாள்களாக நாள்தோறும் சராசரியாக 5 ஆயிரம் போ் நலம் பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வெள்ளிக்கிழமையும் 5,245 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

இதனிடையே, தமிழகத்தில் தொடா்ந்து ஐந்தாவது நாளாக 5 ஆயிரத்துக்கும் குறைவாக கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. அதன்படி, வெள்ளிக்கிழமை 4,389 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு விவரம்:

தமிழகத்தில் இதுவரை 87.66 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், 6 லட்சத்து 79,191 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவா்கள் அனைவருக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக சென்னையில் 1,140 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

அதற்கு அடுத்தபடியாக, கோவையில் 387 பேருக்கும், செங்கல்பட்டில் 261 பேருக்கும், சேலத்தில் 244 பேருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தவிர, தமிழகத்தின் ஏனைய மாவட்டங்கள் அனைத்திலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவக் கண்காணிப்பில் உள்ளோரின் எண்ணிக்கை 40,959-ஆக உள்ளது.

57 போ் பலி: இதனிடையே, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 57 போ் பலியாகியுள்ளனா். உயிரிழந்தவா்களில் 37 போ் அரசு மருத்துவமனைகளிலும், 20 போ் தனியாா் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றவா்களாவா். இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10,529-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com