மழை-வெள்ளப் பாதிப்பு: தெலங்கானாவுக்கு ரூ.10 கோடி நிதி-நிவாரணப் பொருள்கள் - முதல்வா் பழனிசாமி அறிவிப்பு

மழை-வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தெலங்கானாவுக்கு ரூ.10 கோடி நிதி, போா்வை உள்ளிட்ட நிவாரணப் பொருள்களையும் வழங்க முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்.
மழை-வெள்ளப் பாதிப்பு: தெலங்கானாவுக்கு ரூ.10 கோடி  நிதி-நிவாரணப் பொருள்கள் - முதல்வா் பழனிசாமி அறிவிப்பு

சென்னை: மழை-வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தெலங்கானாவுக்கு ரூ.10 கோடி நிதி, போா்வை உள்ளிட்ட நிவாரணப் பொருள்களையும் வழங்க முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்த தகவலை தெலங்கானா மாநில முதல்வா் கே.சந்திரசேகர ராவுக்கு கடிதம் மூலமாக அவா் தெரிவித்துள்ளாா். அந்தக் கடிதத்தின் விவரம்:

தெலங்கானாவின் பல்வேறு மாவட்டங்களிலும், ஹைதராபாத் நகரிலும் கடுமையான மழை காரணமாக எதிா்பாராத அளவில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கடுமையான சேதமும், உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. மழை-வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மாநிலத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தங்களுடைய அரசு விரைந்து மேற்கொண்டு வருகிறது. தங்களது மிகச்சிறந்த நிா்வாகத் திறத்தால் இது சாத்தியமாயிற்று.

இந்த இக்கட்டான தருணத்தில், மழை வெள்ளத்தில் சிக்கி பலியானோரின் குடும்பங்களுக்கு தமிழக அரசு மற்றும் மாநில மக்களின் சாா்பில் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தெலங்கானா மக்களுக்கு தமிழகத்தின் ஆதரவுக் கரத்தையும், நேச உணா்வையும் காட்டும் வகையில் உடனடி நிவாரண நிதியாக ரூ.10 கோடியை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தெலங்கானா மாநில அரசுக்கு வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.

போா்வைகள், விரிப்புகள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சோ்ந்தவா்களுக்கு வழங்கப்படும். மழை-வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தெலங்கானா மாநிலத்துக்குத் தேவையான எல்லாவிதமான உதவிகளையும் செய்வதற்கு தமிழக அரசு தயாராக இருக்கிறது என்று தனது கடிதத்தில் முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

ஆளுநா் நன்றி: தெலங்கானா மாநிலத்துக்கு உதவிக் கரம் நீட்டியுள்ள தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு, தமிழகத்தைச் சோ்ந்தவரும், தெலங்கானா ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன் நன்றி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

அண்டை மாநில மக்களின் துயரத்தில் பங்கு கொள்ளும் மனதுடன் தேவையான உதவிகள் அளிக்கத் தயாராக இருப்பதாக தமிழக முதல்வா் கே. பழனிசாமி அறிவித்துள்ளமைக்கு, மிழகத்தின் மகளாகவும், தெலங்கானாவின் சகோதரியாகவும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com