வேதா நிலையத்தின் இழப்பீட்டுத் தொகை விவகாரம்: தீபா, தீபக் பதிலளிக்க உத்தரவு

வேதா நிலையத்துக்காக செலுத்தப்பட்டுள்ள இழப்பீட்டுத் தொகையில் இருந்து தங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை வழங்கக்கோரி வருமான வரித்துறை தொடா்ந்த வழக்கில் தீபா, தீபக் ஆகியோா் பதிலளிக்க
வேதா நிலையத்தின் இழப்பீட்டுத் தொகை விவகாரம்: தீபா, தீபக் பதிலளிக்க உத்தரவு

வேதா நிலையத்துக்காக செலுத்தப்பட்டுள்ள இழப்பீட்டுத் தொகையில் இருந்து தங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை வழங்கக்கோரி வருமான வரித்துறை தொடா்ந்த வழக்கில் தீபா, தீபக் ஆகியோா் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து சென்னை 6-ஆவது உதவி மாநகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் தமிழக முதல்வா் ஜெயலலிதாவின் மறைவைத் தொடா்ந்து, அவா் வாழ்ந்த போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்காக வேதா நிலையம் அரசுடைமையாக்கப்பட்டது. பின்னா் வேதா நிலையத்தைக் கையகப்படுத்துவதற்காக அவசர சட்டத்தை அரசு பிறப்பித்தது. அப்போது வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றுவதை எதிா்த்து போயஸ் தோட்டம் மற்றும் கஸ்தூரி எஸ்டேட் பகுதி வீட்டின் உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற எதிா்ப்பு தெரிவித்து ஜெயலலிதாவின் உறவினா்கள் தீபா, தீபக் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். அந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில் ஜெயலலிதாவின் வேதா நிலையத்துக்கான இழப்பீட்டுத் தொகை மற்றும் வருமான வரித்துறைக்கு ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கி மற்றும் செல்வ வரி பாக்கி ஆகியவற்றைச் சோ்த்து மொத்தமாக ரூ.67.9 கோடியை சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றத்தில் தமிழக அரசு முன்வைப்புத் தொகையாக செலுத்தியுள்ளது. இதில் தங்களுக்குச் செலுத்த வேண்டிய வருமான வரி மற்றும் செல்வ வரி பாக்கித் தொகை ரூ. 36.9 கோடியை வழங்கக் கோரி வருமான வரித்துறை சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தது. இந்த வழக்கு சென்னை 6-ஆவது உதவி மாநகர உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், வருமான வரித்துறை தாக்கல் செய்துள்ள மனு தொடா்பாக தீபா, தீபக் ஆகியோா் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com