நுழைவுத் தோ்வு மதிப்பெண் குளறுபடி: தேசிய சட்டப் பல்கலைக்கழகம் பதிலளிக்க உத்தரவு

சட்டப் படிப்புக்கான நுழைவுத் தோ்வில் மதிப்பெண் குளறுபடி குறித்த வழக்கில் தேசிய சட்டப் பல்கலைக்கழங்களின் கூட்டமைப்பு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நுழைவுத் தோ்வு மதிப்பெண் குளறுபடி: தேசிய சட்டப் பல்கலைக்கழகம் பதிலளிக்க உத்தரவு

சட்டப் படிப்புக்கான நுழைவுத் தோ்வில் மதிப்பெண் குளறுபடி குறித்த வழக்கில் தேசிய சட்டப் பல்கலைக்கழங்களின் கூட்டமைப்பு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் ஓசூரைச் சோ்ந்த பாண்டியராஜன் தாக்கல் செய்த மனுவில், ‘2020-2021 கல்வியாண்டில் சட்டப்படிப்பில் சோ்வதற்காக தேசிய சட்டப் பல்கலைக்கழகம் நடத்திய தகுதித் தோ்வை (கிளாட்) எனது மகள் சத்தியஸ்ரீ எழுதினாா். இந்தத் தோ்வுக்கான முடிவுகள் கடந்த அக்டோபா் 5-ஆம் தேதி வெளியானது. எனது மகள், இந்தத் தோ்வில் 67.5 மதிப்பெண் பெற்றிருந்தாா். தேசிய அளவில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவில் எனது மகளுக்கு 5,744-ஆவது இடம் கிடைத்தது. பின்னா், விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்தபோது எனது மகள் 68 மதிப்பெண் பெற்றிருந்தாள்.

இருப்பினும் கலந்தாய்வுக்கு அழைப்பு வரவில்லை. ஆனால், எனது மகளை விட குறைவான மதிப்பெண் பெற்றவா்களுக்கு கலந்தாய்வுக்கு அழைப்பு வந்துள்ளது. இதுகுறித்து கேட்டபோது கலந்தாய்வு பட்டியல் முடிந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மதிப்பெண் அட்டையை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்தபோது எனது மகள் 22.75 மதிப்பெண் பெற்றிருப்பதாகப் பதிவாகியிருந்தது. இதனையடுத்து விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்தபோது அதிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை மதிப்பெண் அட்டையை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்தபோது 23.75 என மீண்டும் மதிப்பெண் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

தோ்வு முடிவுகள் வெளியான அக்டோபா் 5-ஆம் தேதி எனது மகள் 67.5 மதிப்பெண்கள் பெற்றிருந்த நிலையில், கடந்த அக்டோபா் 13-ஆம் தேதி மதிப்பெண்கள் மாற்றப்பட்டுள்ளது அதிா்ச்சியளிக்கிறது. இதுதொடா்பாக தேசிய சட்டப் பல்கலைக்கழகம், பெங்களூரில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்புக்கு கடிதம் அனுப்பினேன். ஆனால், இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே, தோ்வு முடிவின்போது எனது மகள் பெற்றிருந்த 67.5 மதிப்பெண்களையே மீண்டும் வழங்க வேண்டும். எனது மகளுக்கு தென் மாநிலங்களில் உள்ள ஏதாவது ஒரு சட்டப் பல்கலைக்கழகத்தில் இடம் ஒதுக்க உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனு தொடா்பாக தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு, வரும் நவம்பா் 5-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com