சேர்வலாறு அணைப் பகுதிக்குப் பேருந்து இயக்கக்கோரி போக்குவரத்துக் கழக பணிமனை முற்றுகை

சேர்வலாறு அணைப் பகுதிக்கு நிறுத்தப்பட்ட பேருந்தை மீண்டும் இயக்க வலியுறுத்தி பொதுமக்கள் பாபநாசம் அரசுப் போக்குவரத்துக்கழகப் பணிமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
சேர்வலாறுக்கு பேருந்து இயக்க வலியுறுத்தி நடைபெற்ற முற்றுகையில் பங்கேற்றவர்கள்
சேர்வலாறுக்கு பேருந்து இயக்க வலியுறுத்தி நடைபெற்ற முற்றுகையில் பங்கேற்றவர்கள்

சேர்வலாறு அணைப் பகுதிக்கு நிறுத்தப்பட்ட பேருந்தை மீண்டும் இயக்க வலியுறுத்தி பொதுமக்கள் பாபநாசம் அரசுப் போக்குவரத்துக்கழகப் பணிமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சேர்வலாறு அணைப் பகுதியில் காணிக் குடியிருப்பு மற்றும் மின் வாரிய குடியிருப்பு பகுதிகளில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதிக்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் ஒரு பேருந்து இயக்கப்பட்டு வந்தது. கரோனாத் தொற்று பரவல் பொது முடக்கத்தை முன்னிட்டு பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 

மீண்டும் செப்டம்பர் 1 முதல் பேருந்துகள் இயக்கப்பட்டதையடுத்து காரையாறு அணைப் பகுதிக்குச் செல்லும் பேருந்து சேர்வலாறுக்கு இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சேர்வலாறுக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து காரையாறு பேருந்துக்கு சேர்வலாறு செல்ல அனுமதியில்லை என்று வனத்துறையினர் கூறியதையடுத்து கடந்த 4 நாள்களாக பேருந்து நிறுத்தப்பட்டது.

இதனால் அந்த பகுதியில் உள்ள காணிக் குடியிருப்பு மக்கள் மற்றும் மின்வாரியத் தொழிலாளர் குடும்பத்தினர் சிரமத்திற்குள்ளாகினர். இதையடுத்து நிறுத்தப்பட்ட பேருந்தை மீண்டும் இயக்க கோரி பாபநாசம் அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலர் ரவீந்திரன் மற்றும் தொழிற்சங்கத் தலைவர் சுரேஷ் ஆகியோர் தலைமையில் காணி மக்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை மேலாளர் சண்முகம் பேச்சு நடத்தி வருகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com