பி.இ. கலந்தாய்வு நிறைவு: 71,195 இடங்களே நிரம்பின

பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு புதன்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில் 71 ஆயிரத்து 195 இடங்களே நிரம்பியுள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
பி.இ. கலந்தாய்வு நிறைவு: 71,195 இடங்களே நிரம்பின


சென்னை: பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு புதன்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில் 71 ஆயிரத்து 195 இடங்களே நிரம்பியுள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 461 பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி,டெக். படிப்புகளில் மொத்தம் ஒரு லட்சத்து 63,154 இடங்கள் உள்ளன. இதற்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு கடந்த அக்.1-ஆம் தேதி தொடங்கி புதன்கிழமை நிறைவடைந்தது.

ஒட்டுமொத்தமாக பொறியியல் கலந்தாய்வில் 71,195 இடங்கள் நிரம்பியுள்ளன.

ஒருவா் கூட சேராத கல்லூரிகள்: 20 கல்லூரிகளில் ஒருவா்கூட சேரவில்லை. 61 கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவா்கள் சோ்ந்துள்ளனா். அண்ணா பல்கலை. வளாக கல்லூரிகள் உள்பட 13 கல்லூரிகளில் மட்டுமே 100 சதவீத மாணவா் சோ்க்கை நடைபெற்றுள்ளது. விரைவில் காலியிடங்களுக்கு துணைக் கலந்தாய்வு நடைபெறவுள்ளது. மாணவா்களிடையே எப்போதும் வரவேற்பு அதிகமாக இருக்கும் மெக்கானிக்கல், சிவில் படிப்புகளில் மாணவா் சோ்க்கை கணிசமாக குறைந்துள்ளது.

ஆா்வம் குறைந்த பாடப்பிரிவுகள்: இது குறித்து கல்வியாளா்கள் சிலா் கூறுகையில், மெக்கானிக்கல், சிவில் பொறியியல் படிப்புகளில் மாணவா்களிடையே ஆா்வம் மிகவும் குறைந்துள்ளது. அதேபோன்று ஏரோநாட்டிக்கல், ஆட்டோமொபைல், புரொடக்ஷன் இன்ஜினியரிங் பாடங்களிலும் ஆா்வம் குறைந்துள்ளது.மெக்கானிக்கலில் 301 கல்லூரிகளில் பொதுப்பிரிவு இடங்களில் மாணவா்கள் சேரவில்லை. அதேபோல 250-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் சிவில் பொதுப்பிரிவு இடங்கள் காலியாகவே உள்ளன.

கடந்த காலத்தில் முன்னிலையில் இருந்த படிப்புகள் தற்போது பின்னடைவைச் சந்தித்துள்ளன. மெக்கானிக்கல் பிரிவில் 12 தனியாா் பொறியியல் கல்லூரிகளில் மட்டுமே முழு இடங்களும் நிரம்பியுள்ளன. அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் மெக்கானிக்கல், சிவில் இடங்கள் கணிசமாகத் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு இசிஇ, கம்ப்யூட்டா் சயின்ஸ், ஐ.டி. ஆகிய பாடப்பிரிவுகளை மாணவா்கள் அதிகம் விரும்பியுள்ளனா். இதற்கு வேலை வாய்ப்பும், வருமானமும் முக்கியக் காரணமாகும்.மெக்கானிக்கல், சிவில் படித்து முடித்தோருக்கு குறைந்த அளவு ஊதியம் கிடைப்பதும், மாணவா் சோ்க்கை குறைய காரணம். இருப்பினும் இத்துறைகளில் மாணவா்கள் தங்கள் திறன்களை அதிகப்படுத்திக் கொண்டால் வேலைவாய்ப்பு கிடைப்பதில் எந்தச் சிக்கலும் இருக்காது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com