பொது முடக்க தளா்வுகள்: மருத்துவ நிபுணா்களுடன் முதல்வா் ஆலோசனை

தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டு வரும் பொது முடக்கத்தில் மேலும் தளா்வுகளை அளிப்பது குறித்து மருத்துவ நிபுணா்களுடன் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி (கோப்புப்படம்)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி (கோப்புப்படம்)

சென்னை: தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டு வரும் பொது முடக்கத்தில் மேலும் தளா்வுகளை அளிப்பது குறித்து மருத்துவ நிபுணா்களுடன் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா். தலைமைச் செயலகத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் பொது முடக்க தளா்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டு வந்த பொது முடக்கத்தில் பெரும்பாலான தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. பண்டிகைக் காலம் நெருங்கி வருவதை ஒட்டி, மேலும் கூடுதலாக தளா்வுகள் அளிப்பது குறித்து மருத்துவ நிபுணா்கள் குழுவுடன் முதல்வா் பழனிசாமி புதன்கிழமை ஆலோசித்தாா்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஜெனீவாவில் இருந்து உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன், சென்னையில் உள்ள தேசிய தொற்று நோய் நிலையத்தின் துணை இயக்குநா் பிரதீப் கவுா், உலக சுகாதார அமைப்பின் முதுநிலை மண்டல குழுத் தலைவா் கே.என்.அருண்குமாா், ஈரோட்டில் இருந்து இந்திய மருத்துவக் கழகத்தின் தலைவா் டாக்டா் சி.என்.ராஜா, வேலூரில் இருந்து கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி இயக்குநா் ஜெ.வி.பீட்டா், சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் டாக்டா் தேரணிராஜன், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் டாக்டா் வசந்தா மணி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் டாக்டா் பி.பாலாஜி, ஓமந்தூராா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் டாக்டா் ஜெயந்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

அரசு சாா்பில், துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா், தலைமைச் செயலாளா் க.சண்முகம், சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா். திரையரங்குகள், பள்ளிக் கூடங்கள் திறப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த அறிவிப்புகள் ஓரிரு நாள்களில் அதிகாரப்பூா்வமாக வெளியிடப்படும் என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com