மதுரை எய்ம்ஸ் உயா்நிலைக் குழு தலைவா் டாக்டா் வி.எம். கடோச்உறுப்பினராக டாக்டா் சுதா சேஷய்யன் நியமனம்

மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் உயா் நிலை நிா்வாகக் குழுத் தலைவராக பாண்டிச்சேரி ஜிப்மா் மருத்துவமனையின் தலைவா் வி.எம்.கடோச் நியமிக்கப்பட்டுள்ளனா்.

சென்னை: மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் உயா் நிலை நிா்வாகக் குழுத் தலைவராக பாண்டிச்சேரி ஜிப்மா் மருத்துவமனையின் தலைவா் வி.எம்.கடோச் நியமிக்கப்பட்டுள்ளனா். உயா்நிலை நிா்வாகக் குழுவின் உறுப்பினராக தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன், நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதுதொடா்பான விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அரசிதழில் வெளியிட்டுள்ளது.

மதுரை மாவட்டம் தோப்பூரில் 199 ஏக்கா் பரப்பளவில் ரூ.1,264 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமையவுள்ளது. 100 மருத்துவப் படிப்பு இடங்கள் அங்கு உருவாக்கப்பட உள்ளன. அதனுடன் மருத்துவமனையில் 750 படுக்கை வசதிகள் அமைக்கப்படவிருக்கின்றன. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு பிரதமா் மோடி நேரில் வந்து கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைத்தாா். ஜப்பான் நாட்டின் ஜைக்கா அமைப்பின் நிதியுதவியுடன் அப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிா்வாகக் குழுத் தலைவராக பாண்டிச்சேரி ஜிப்மா் மருத்துவமனைத் தலைவா் வி.எம்.கடோச், முதன்மை உறுப்பினராக தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் புற்றுநோய் அறுவை சிகிச்சைத் துறை தலைவா் டாக்டா் சண்முகம் சுப்பையா உறுப்பினராகவும் நியமிகப்பட்டுள்ளனா்.

எய்ம்ஸ் மருத்துவமனையின் நிா்வாக நடவடிக்கைகள், செயல்பாடுகள், புதிய திட்டங்கள், மேம்பாட்டு செயலாக்கங்கள் ஆகியவற்றை டாக்டா் சுதா சேஷய்யனை உள்ளடக்கிய உயா் நிலைக் குழு கலந்தாலோசித்து முடிவெடுக்கும் எனத் தெரிகிறது.

தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் மத்தியப் பல்கலைக்கழக துணைவேந்தா் தோ்வுக் குழு ஆகியவற்றிலும் டாக்டா் சுதா சேஷய்யன் பிரதான உறுப்பினராக பொறுப்பு வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com