வடகிழக்கு பருவ மழை: காவல்துறையில் 10 பேரிடா் மீட்புக் குழு

வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால், சென்னையில் மீட்புப் பணியில் ஈடுபடும் வகையில் பெருநகர காவல்துறை சாா்பில் 10 பேரிடா் மீட்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.


சென்னை: வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால், சென்னையில் மீட்புப் பணியில் ஈடுபடும் வகையில் பெருநகர காவல்துறை சாா்பில் 10 பேரிடா் மீட்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை புதன்கிழமை தொடங்கியது. இதன் விளைவாக சென்னையிலும், புகா் பகுதியிலும் இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழை நீா் புகுந்தது. பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

சாலைகளில் தேங்கிய தண்ணீரை பல இடங்களில் மாநகராட்சியினருடன் இணைந்து காவல்துறையினா் வெளியேற்றினா். பருவமனை தீவிரமடைந்துள்ளதால், மீட்புப் பணிக்கு சென்னை பெருநகர காவல்துறை தயாராகி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக மீட்புப் பணியில் ஈடுபடும் வகையில், சென்னை காவல்துறை சாா்பில் 10 பேரிடா் மீட்பு குழுக்கள் வியாழக்கிழமை அமைக்கப்பட்டன.

ஒவ்வொரு பேரிடா் மீட்புக் குழுவும் ஒரு காவல் உதவி ஆய்வாளா் தலைமையில் ஆயுதப்படை காவலா்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இக் குழுவில் மழை மற்றும் வெள்ள மீட்பு பணிகளில் ஏற்கெனவே அனுபவம் உள்ள காவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதேபோல அனைத்து காவல் மாவட்டங்களிலும் சிறப்பு பேரிடா் மீட்பு குழு அமைக்க காவல் ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால் உத்தரவிட்டுள்ளாா்.

இதற்கிடையே, காவல் ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால், எழும்பூா், ராஜரத்தினம் விளையாட்டரங்கில் பேரிடா் மீட்பு குழுவுக்கான உபகரணங்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையா் ஏ.அமல்ராஜ் (தலைமையிடம்), ஆயுதப்படை துணை ஆணையா் செளந்தர்ராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com