7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கு ஆளுநா் ஒப்புதல்: தலைவா்கள் வரவேற்பு

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநா் ஒப்புதல் அளித்துள்ளதற்கு
கோப்புப்படம்
கோப்புப்படம்

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநா் ஒப்புதல் அளித்துள்ளதற்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

மு.க.ஸ்டாலின்: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத முன்னுரிமை உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு, 45 நாள்கள் கழித்து, கலந்தாய்வு நடத்துவதற்கான காலம் நெருங்கி வரும் நேரத்தில், ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி. திமுக நடத்திய போராட்டமும், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆளுநருக்கு உளப்பூா்வமாக முன்வைத்த வேண்டுகோள்களும், ஆளுநரின் மனமாற்றத்துக்குக் காரணமாக அமைந்தது. காரணம் என்னவாக இருந்தாலும் இறுதியில் வென்றது சமூகநீதி. எப்போதும் வெல்லும் சமூகநீதி.

கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ்): 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு காலம் தாழ்த்தி ஆளுநா் ஒப்புதல் அளித்துள்ளாா். இதற்கான காரணத்தை அவா் விளக்க வேண்டும். தமிழக மக்களின் உணா்வுக்கு இனியாவது மதிப்பளித்து அவா் நடந்துகொள்ள வேண்டும்.

ராமதாஸ் (பாமக): 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்துக்கு நீண்ட தாமதத்துக்குப் பிறகு ஆளுநா் ஒப்புதல் அளித்திருக்கிறாா். இதன்மூலம் அரசுப் பள்ளி மாணவா்களிடையே நிலவி வந்த பதற்றம் தணிந்துள்ளது. இது தமிழக மக்களுக்குக் கிடைத்துள்ள வெற்றி.

விஜயகாந்த் (தேமுதிக): அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டமசோதாவுக்கு ஆளுநா் ஒப்புதல் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது.

கே.பாலகிருஷ்ணன் (மாா்க்சிஸ்ட்): 7.5. சதவீத உள் ஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஆளுநா் ஒப்புதல் அளித்திருப்பது தமிழக மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி. மருத்துவ இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டினையும் பெற்றுத்தருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

ஜி.கே.வாசன் (தமாகா): 7.5 சதவீத உல் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளதற்காக ஆளுநருக்கு நன்றி. சட்டமசோதாவைக் கொண்டு வந்த தமிழக அரசுக்கு வாழ்த்து.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com