செப்.6 முதல் திருச்செந்தூர் முருகன் தரிசனத்துக்கு ஆன்லைன் முன்பதிவு

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வருகின்ற செப். 6-ம் தேதி முதல் ஆன்லைன் முன் பதிவு மூலமே பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும் என திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Online booking for Thiruchendur Murugan Darshan from Sep 6
Online booking for Thiruchendur Murugan Darshan from Sep 6


திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வருகின்ற செப். 6-ம் தேதி முதல் ஆன்லைன் முன் பதிவு மூலமே பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும் என திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து திருக்கோயில் செயல் அலுவலர் சா.ப.அம்ரித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக அரசின் உத்தரவுப்படி திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த 1-ம் தேதி முதல் தினசரி காலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்திட அனுமதிக்கப்பட்டுள்னர்.

கோவிட் 19 தடுப்பு நடவடிக்கையாக கோயிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் உடல் வெப்ப பரிசோதனை செய்தும், கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்திய பிறகுமே நாளொன்றுக்கு 2 ஆயிரம் பேர் மட்டும் இலவச மற்றும் ரூ. 100 கட்டணத்தில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

திருக்கோயிலில் மூலவர் மற்றும் சண்முகர் சன்னதிகளில் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கபட்டுள்ளனர். மேலும் பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணற்றில் நீராடுவதற்கும், திருக்கோயிலுக்குள் பூஜை பொருட்களை கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 10 வயதுக்குட்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் தரிசனத்திற்கு வருவதை தவிர்த்திடுமாறு நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், வருகின்ற செப். 6-ம் தேதி முதல் ஆன்லைன் முன்பதிவு மூலமே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்திட அனுமதிக்கப்படவுள்ளார்கள். இதற்காக www.tnhrce.gov.in என்ற இணையதள முகவரியில் வெள்ளிக்கிழமை (செப். 4) முதல் பக்தர்கள் இலவச மற்றும் கட்டண தரிசனத்தில் முன்பதிவு செய்து அனுமதிச்சீட்டு பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் தரிசனத்திற்கு வரும் போது அனுமதிச்சீட்டுடன் பதிவிற்கு பயன்படுத்திய ஆதார் அட்டையையும் கட்டாயம் கொண்டு வர வேண்டும். இத்திருக்கோயிலில் செப். 6-ம் தேதி தொடங்கவுள்ள ஆவணித்திருவிழா நிகழ்வுகள் நீங்கலாக இடைப்பட்ட நேரங்களில் மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com