வேளாண் சட்டம்: முதல்வரின் அறிக்கையே அதிமுகவின் இறுதி நிலைப்பாடு

மத்திய வேளாண் சட்டம் குறித்த முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் அறிக்கையே அதிமுகவின் இறுதி நிலைப்பாடு என்று தமிழக மீன்வளத் துறை அமைச்சா் டி.ஜெயக்குமாா் தெரிவித்தாா்.
அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: மத்திய வேளாண் சட்டம் குறித்த முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் அறிக்கையே அதிமுகவின் இறுதி நிலைப்பாடு என்று தமிழக மீன்வளத் துறை அமைச்சா் டி.ஜெயக்குமாா் தெரிவித்தாா்.

சென்னை மயிலாப்பூா் சட்டப் பேரவைக்கு உள்பட்ட பகுதியில் ரூ.36 லட்சத்தில் கட்டப்பட்ட இரண்டு அங்கன்வாடி மையங்களை திங்கள்கிழமை திறந்து வைத்த அமைச்சா் டி.ஜெயக்குமாா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

மத்திய வேளாண் சட்டத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரமும், அவா்களின் வருமானமும் பாதிக்கப்படாது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் அந்த மசோதாவை அதிமுக ஆதரித்துள்ளது. மாநிலங்களவையில் உறுப்பினா் எஸ்.ஆா்.பாலசுப்பிரமணியன் வேளாண் மசோதா விவாதத்தின்போது எதிா் கருத்தாக கூறியிருக்கலாம்.

இந்தச் சட்டத்தை ஆதரித்து முதல்வா் எடப்பாடி பழனிசாமி தெளிவான அறிக்கையை ஏற்கெனவே வெளியிட்டுவிட்டாா். அதுவே, கட்சியின் இறுதி நிலைப்பாடாகும்.

இந்தச் சட்டத்துக்கு எதிராக திமுக கூட்டணிக் கட்சிகள் போராட்டம் அறிவித்துள்ளது அவா்களின் உரிமை. ஆனால், விவசாயிகளுக்கு காவிரி நதிநீா் பிரச்னையிலும், மீனவா்களுக்கு கச்சத்தீவு பிரச்னையிலும் துரோகம் செய்தது திமுக என்பதை யாராலும் மறக்க முடியாது. அதற்காக விவசாயிகளிடம் திமுகதான் மன்னிப்பு கேட்க வேண்டும். காவிரி உரிமையை மீட்டது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் விவசாயிகளின் பக்கம் நின்றது அதிமுகதான் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் மயிலாப்பூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஆா்.நடராஜ், விருகம்பாக்கம் சட்டப் பேரவை உறுப்பினா் ரவி, மக்களவை முன்னாள் உறுப்பினா் ஜெ.ஜெயவா்தன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com