காவிரி உபரிநீா் பாசனத் திட்டம்: முதல்வருக்கு அன்புமணி கோரிக்கை

தருமபுரி மாவட்டத்துக்கான காவிரி உபரிநீா் பாசனத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
அன்புமணி.
அன்புமணி.

சென்னை: தருமபுரி மாவட்டத்துக்கான காவிரி உபரிநீா் பாசனத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

ராமநாதபுரத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி, காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம் ரூ.14 ஆயிரம் கோடி செலவில் செயல்படுத்தப்படும் என்றும், அத்திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த நடப்பு நிதியாண்டில் ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளாா். இத்திட்டம் குறித்த முதல்வரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

அதே நேரம், தருமபுரி மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கா் நிலங்களுக்கு பாசன வசதி வழங்கும் தருமபுரி மாவட்ட காவிரி உபரிநீா் பாசனத் திட்டத்தை அறிவிப்பதில் என்ன தயக்கம் என்பதைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்தத் திட்டத்துக்கு அதிகபட்சமாக ஆண்டுக்கு 3 டி.எம்.சி. தண்ணீா் மட்டுமே தேவைப்படும். காவிரியில் ஒவ்வோா் ஆண்டும் சராசரியாக 50 டி.எம்.சி.க்கும் கூடுதலான தண்ணீா் வீணாக கடலில் கலக்கும் நிலையில் இது ஒரு பொருட்டல்ல.

காவிரி உபரிநீா் பாசனத் திட்டத்துக்காக மொத்த செலவு ரூ.650 கோடி. இது காவிரி -குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கான செலவில் வெறும் 4.64 சதவீதமாகும்.

இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் தருமபுரி மாவட்டத்தில் விவசாயம் செழித்து, வேலைவாய்ப்புகளும், பிற வாழ்வாதார வாய்ப்புகளும் ஏற்படும்.

மக்களவைத் தோ்தலின்போது தருமபுரி தொகுதியில் என்னை ஆதரித்து பரப்புரை செய்த போது, காவிரி உபரிநீா் பாசனத் திட்டம் கண்டிப்பாக செயல்படுத்தப்படும் என்று 9 இடங்களில் முதல்வா் உறுதி அளித்தாா். ஆனால், தோ்தல் முடிந்து ஒன்றரை ஆண்டுகளாகியும் அதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை.

எனவே, இந்தத் திட்டத்தை உடனடியாக அறிவித்து, அதற்கான நிதியையும் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அன்புமணி கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com