சசிகலாவை எதிர்த்துத்தான் ஆட்சியும் கட்சியும் நடக்கிறது: அமைச்சர் கே.சி.வீரமணி

தமிழகத்தில் சசிகலாவை எதிர்த்துத்தான் அதிமுக கட்சியும் ஆட்சியும் நடைபெற்றுக் கொண்டுள்ளது என்று தமிழக வணிகவரி, பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.
சசிகலாவை எதிர்த்துத்தான் ஆட்சியும் கட்சியும் நடக்கிறது: அமைச்சர் கே.சி.வீரமணி
சசிகலாவை எதிர்த்துத்தான் ஆட்சியும் கட்சியும் நடக்கிறது: அமைச்சர் கே.சி.வீரமணி

வேலூர்: தமிழகத்தில் சசிகலாவை எதிர்த்துத்தான் அதிமுக கட்சியும் ஆட்சியும் நடைபெற்றுக் கொண்டுள்ளது என்று தமிழக வணிகவரி, பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.

கூட்டுறவுத்துறை சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவுக்கு தலைமை வகித்த அவர், 3 நடமாடும் நியாயவிலைக் கடைகளை தொடங்கி வைத்ததுடன், 63 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.30 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். 

மேலும், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட கிராமப்புறங்களிலுள்ள மண்பாண்டம் செய்யும் தொழிலாளர்கள் 200 பேருக்கு விலையில்லா மின்விசை சக்கர இயந்திரங்களை வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் வீரமணி செய்தியாளர்களிடம் கூறியது, கரோனா பொதுமுடக்கத்தால் கடந்த 6 மாதங்களில் 40 சதவீதம் அளவுக்கு தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருந்தது. அதில் தற்போது 10 சதவீத அளவுக்கு கூடுதல் வருவாய் கிடைக்க தொடங்கியுள்ளது. சோளிங்கரில் கட்டப்பட்டு வரும் அரசுக் கல்லூரி இந்த கல்வியாண்டிலேயே செயல்பட்டுக்குக் கொண்டு வரப்படும். மாணவர் சேர்க்கைக்கான படிவம் அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் முதல்வர் கல்லூரியை தொடங்கி வைப்பார் என்றார்.

தொடர்ந்து, சிறையில் இருந்து விரைவில் வெளிவர உள்ள சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது குறித்து கேட்டபோது, தமிழகத்தில் சசிகலாவை எதிர்த்துத்தான் அதிமுக கட்சியும் ஆட்சியும் நடைபெற்று வருகிறது. அவர்கள் தேவை இல்லாதவர்கள், மக்களால் வெறுக்கப்படக் கூடியவர்கள் என்ற நிலையில்தான் தமிழகத்தில் ஆட்சி நடைபெற்றுக் கொண்டுள்ளது. அதிமுகவினரை பொருத்தவரை தெளிவாக உள்ளனர் என்றார்.

மேலும், அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து கேட்டதற்கு பதிலளித்த அமைச்சர் வீரமணி, முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்வதில் சர்ச்சைகள் ஏதும் இல்லை. எல்லாம் நல்லபடியாகவே சென்று கொண்டுள்ளது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com