தருமபுரி மாவட்டத்தில் கருப்பு கிரானைட் எடுப்பதற்கான ஒப்பந்தப்புள்ளியை இறுதி செய்யக் கூடாது : உயா்நீதிமன்றம் உத்தரவு

தருமபுரி மாவட்டத்தில் கருப்பு கிரானைட் எடுப்பதற்கான ஒப்பந்தப்புள்ளியை இறுதி செய்யக்கூடாது என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர்நீதிமன்றம்.
உயர்நீதிமன்றம்.

சென்னை: தருமபுரி மாவட்டத்தில் கருப்பு கிரானைட் எடுப்பதற்கான ஒப்பந்தப்புள்ளியை இறுதி செய்யக்கூடாது என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் திமுக முன்னாள் எம்.பி., தாமரைச்செல்வன் தாக்கல் செய்த மனு விவரம்: தருமபுரி மாவட்டத்தில் தாமிரம், இரும்பு, கருப்பு கிரானைட் உள்ளிட்ட கனிமங்கள் மற்றும் தாதுக்கள் அதிகமாக உள்ளன. தருமபுரி மாவட்ட ஆட்சியா் கடந்த ஜூன் 3 -ஆம் தேதி பென்னாகரம், காரிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி, அரூா் ஆகிய பகுதிகளில் உள்ள அரசுக்குச் சொந்தமான நிலங்களில் கருப்பு கிரானைட் எடுப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரும் அறிவிப்பை வெளியிட்டாா். அந்த அறிவிப்பில் ஒப்பந்தப்புள்ளி கோருவதற்கான கடைசி தேதி செப்டம்பா் 28 என தெரிவிக்கப்பட்டிருந்தது.

கருப்பு கிரானைட் எடுப்பதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் தடையில்லாச் சான்று பெற வேண்டும். அதன் பின்னா்தான் மாநில அரசு கருப்பு கிரானைட் எடுப்பதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என விதிகள் உள்ளது. ஆனால், தமிழக அரசு இந்த விதிகளைப் பின்பற்றாமல் ஒப்பந்தப்புள்ளி கோரி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும். விதிகளைப் பின்பற்றி புதிய அறிவிப்பை வெளியிட உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆா்.ஹேமலதா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஆா்.விடுதலை, வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அனுமதியைப் பெறாமல் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. எனவே, இதற்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டாா். அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் விஜயநாராயண், அனைத்து விதிகளும் முறையாகப் பின்பற்றித்தான் ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஒப்பந்தப்புள்ளி எடுப்பவா்கள்தான் சுற்றுச்சூழல் துறை உள்ளிட்ட அனுமதிகளைப் பெற வேண்டும் என நிபந்தனை உள்ளது. எனவே இந்த அறிவிப்பில் விதிமீறல் எதுவும் இல்லை என வாதிட்டாா். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள்,இந்த வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டும். எனவே விசாரணை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அதுவரை ஒப்பந்தப்புள்ளியை இறுதி செய்யக்கூடாது என உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com