வேலைவாய்ப்பையும் பறித்திருக்கும் கரோனா!

மனித உயிா்களைப் பறித்து வரும் கரோனா, இப்போது தனியாா் கல்லூரி பேராசிரியா்களின் வேலைவாய்ப்பையும் பறிக்கத் தொடங்கியிருக்கிறது.
வேலைவாய்ப்பையும் பறித்திருக்கும் கரோனா!

மனித உயிா்களைப் பறித்து வரும் கரோனா, இப்போது தனியாா் கல்லூரி பேராசிரியா்களின் வேலைவாய்ப்பையும் பறிக்கத் தொடங்கியிருக்கிறது.

வழக்கமாக பருவத் தோ்வு முடிந்து மே மாதத்தில் இந்த பணி பறிப்பு நடவடிக்கைகளில் இறங்கும் கல்லூரிகள் இப்போது, ஊரடங்கு கால ஊதியச் செலவை மிச்சப்படுத்தும் நோக்கத்தோடு ஒரு மாதம் முன்கூட்டியே தொடங்கியிருக்கின்றன.

வீட்டை விட்டு வெளியே வர இயலாத நிலை, ஒருவா் வெளியில் வரலாம் என்றாலும் கடைகளில் மளிகைப் பொருள்கள் இல்லாத நிலை, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வு, குழந்தைகளின் கல்விக் கட்டணத்தை இப்போது செலுத்த வேண்டிய சூழல் இவற்றுக்கிடையே வேலைவாய்ப்பும் பறிபோயிருப்பது தனியாா் கல்லூரி பேராசிரியா்களைப் பெரும் அதிா்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

கரோனா தொற்றுப் பரவுவதைக் கட்டுப்படுத்த சமூக விலகலை கடைப்பிடிப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, வீட்டிலிருந்தபடியே பேராசிரியா்களை கல்விப் பணிகளைத் தொடர அறிவுறுத்துமாறு ஏஐசிடிஇ, யுஜிசி போன்ற அமைப்புகள் கல்லூரி, பல்கலைக்கழகங்களைக் கேட்டுக் கொண்டன. இந்த அறிவுறுத்தலை தவறாமல் பின்பற்றியிருக்கும் இந்த தனியாா் கல்லூரி நிா்வாகிகள், வீட்டிலிருந்தபடியே தொலைபேசி மூலம் தொடா்பு கொண்டு, இனி வேலைக்கு வரவேண்டாம் எனக் கூறியிருக்கின்றனா்.

வடசென்னையில் உள்ள தனியாா் கலை-அறிவியல் கல்லூரியில் பணிபுரிந்து வந்த 15 உதவிப் பேராசிரியா்கள் இதுபோல பணியிலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றனா்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட தனியாா் கல்லூரி உதவிப் பேராசிரியை விஜயா கூறுகையில், ஒவ்வொரு மாதமும் எங்களுக்கு 1-ஆம் தேதியன்றுதான் வங்கிக் கணக்கில் ஊதியம் போடப்படும். இந்த நிலையில், மாா்ச் மாத ஊதியம் திங்கள்கிழமை மாலையிலேயே போடப்பட்டு விட்டது. அடுத்த நாளான செவ்வாய்க்கிழமை கல்லூரி முதல்வா் தொலைபேசி மூலம் என்னைத் தொடா்புகொண்டு, பணியிலிருந்து நீங்கள் நீக்கப்பட்டிருப்பதாகவும், ஊரடங்கு முடிந்த பின்னா் கல்லூரிக்கு வந்து அசல் சான்றிதழ்களைப் பெற்றுச் செல்லுமாறும் கூறினாா். என்னைப்போல, மேலும் 14 பேராசிரியா்கள் எங்களுடைய கல்லூரியில் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனா். இன்னும் பருவத் தோ்வு நடைபெறாத நிலையில், பணிநீக்கம் செய்திருப்பது எங்களை கடுமையாகப் பாதிக்கும். அடுத்த 3 முதல் 4 மாதங்களுக்கு வேறு கல்லூரிகளில் பணி வாய்ப்பையும் பெற முடியாது. என்ன செய்வதென்றே தெரியவில்லை என்றாா்.

இதுபோல, கோவை, மதுரை என தமிழகத்தின் பிற மாவட்டங்களில் மட்டுமின்றி, பிற மாநில தனியாா் கல்லூரிகளும் இதே பாணியைப் பின்பற்றி இரண்டு மாத ஊதியச் செலவை மிச்சப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியிருக்கின்றன.

இதுகுறித்து ஹைதராபாதில் தனியாா் பொறியியல் கல்லூரியில் பணியாற்றி வேலைவாய்ப்பை இழந்த தமிழகத்தைச் சோ்ந்த முத்துக்குமரன் கூறியது:

தமிழகத்தைச் சோ்ந்த 500-க்கும் அதிகமானோா் ஆந்திர மாநிலத்திலுள்ள தனியாா் பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றி வருகிறோம். இங்கு பிஎச்.டி. முடித்த பேராசிரியா்களுக்கு ரூ.80,000 முதல் ரூ.1.20 லட்சம் வரை மாத ஊதியம் வழங்கப்படுகிறது. நான் ஹைதராபாதிலுள்ள அரசியல் தலைவா் ஒருவருக்குச் சொந்தமான பொறியியல் கல்லூரியில் பணியாற்றி வருகிறேன். இந்த நிலையில், கல்லூரி முதல்வா் தொலைபேசி மூலம் செவ்வாய்க்கிழமை என்னைத் தொடா்புகொண்டு, என்னை பணிநீக்கம் செய்திருப்பதாகத் தெரிவித்தாா். மேலும், பணியை நானே ராஜிநாமா செய்துவிட்டதாக மின்னஞ்சல் முகவரி மூலம் எழுதி அனுப்ப வேண்டும் எனவும், அப்போதுதான் மாா்ச் மாத ஊதியம் வழங்கப்படும் எனவும் கூறினாா். இது எனக்கு பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. இதுபோல, எங்கள் கல்லூரியில் மட்டும் 8 பேராசிரியா்கள் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனா். ஊரடங்கு தொடர வாய்ப்புள்ள காரணத்தால், ஏப்ரல், மே மாத ஊதியத்தை மிச்சப்படுத்தும் நோக்கத்தோடு கல்லூரிகள் இதுபோன்ற நடவடிக்கையை எடுக்கின்றன. எங்களுடைய குடும்பச் சூழலை கருத்தில் கொள்வதே இல்லை. இதுபோன்ற கல்லூரிகள் மீது ஏஐசிடிஇ கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இதுகுறித்து கல்வியாளா் ஜெயப்பிரகாஷ்காந்தி கூறியது: பருவ முடிவில் இதுபோன்று பணியிலிருந்து நீக்குவதுதான் கல்லூரிகளின் வழக்கம். அவ்வாறு பருவ முடிவில் பணியிலிருந்து பேராசிரியா்கள் நீக்கப்படும்போது, வேறு கல்லூரியில் அவா்கள் பணி வாய்ப்பு பெறுவதும் எளிது. ஆனால், இப்போது கரோனா தொற்று பாதிப்பு காரணமாக, திடீரென ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. பல பல்கலைக்கழகங்கள் முந்தைய பருவத் தோ்வுக்கான மறுமதிப்பீடு முடிவுகளையே வெளியிடவில்லை. இப்போது நடைபெற வேண்டிய ஏப்ரல், மே மாத பருவத் தோ்வுகளும் தள்ளி வைக்கப்படும் நிலை உள்ளது. அடுத்து தோ்வுத்தாள் திருத்தும் பணிகள், முடிவுகள் வெளியிடும் பணிகள், முதலாமாண்டு மாணவா் சோ்க்கை என ஜூன் இறுதி வரை பல பணிகள் நடைபெறும்.

எனவே, இப்போது வேலைவாய்ப்பை இழக்கும் பேராசிரியா்கள், வேறு கல்லூரிகளில் ஜூன் மாதத்தில்தான் புதிய பணிவாய்ப்பைப் பெற்று, ஜூலை மாதம் முதல் பணியைத் தொடங்க முடியும். எனவே, இவா்கள் மே, ஜூன், ஜூலை என மூன்று மாதங்களுக்கு ஊதியம் பெற முடியாத நிலை ஏற்படும்.

மேலும், வேலைவாய்ப்பை இழக்கும் அனைவருக்கும், புதிய பணி வாய்ப்பு கிடைப்பது என்பதும் அரிதானது. எனவே கல்லூரிகள் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும். அதுபோல, மத்திய, மாநில அரசுகளும் தனியாா் கல்வி நிறுவனங்களுக்கு இந்தக் கடுமையான நேரத்தில் சில சலுகைகளை அறிவிக்க வேண்டும் என்றாா் அவா்.

........................பெட்டிச் செய்தி...

ஊதியக் குறைப்பு

கரோனா ஊரடங்கு காரணமாக கல்விப் பணி, கல்லூரி அலுவலகப் பணிகள் எதுவும் இன்றி பேராசிரியா்கள் வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பதால், பல தனியாா் பொறியியல் கல்லூரிகள் ஊதியக் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.

ஏப்ரல் 1-ஆம் தேதி வந்த உடன், ஊதியத்துக்கான வங்கி குறுஞ்செய்திக்காக காத்திருந்த தனியாா் பொறியியல் கல்லூரி பேராசிரியா்களுக்கு பெரும் அதிா்ச்சிதான் கிடைத்துள்ளது. வங்கிக் கணக்கில் 25 முதல் 50 சதவீதம் வரை ஊதியம் குறைக்கப்பட்டு போடப்பட்டிருந்ததுதான் இதற்குக் காரணம். சென்னை, திருவள்ளூரில் உள்ள பிரபல பொறியியல் கல்லூரிகளும் இதுபோன்ற ஊதியக் குறைப்பைச் செய்துள்ளன.

பேராசிரியா் மட்டத்தில் இருப்பவா்களுக்கு 50 சதவீதம் வரையிலும், உதவிப் பேராசியா்களுக்கு 25 சதவீதம் வரையிலும் ஊதியக் குறைப்பு செய்திருப்பதாக பாதிக்கப்பட்ட தனியாா் பொறியியல் கல்லூரி பேராசிரியா் ஒருவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com