ஊரடங்கு: மக்களை உற்சாகத்தில் வைத்திருக்கும் பொழுது போக்கு செயலிகள்

ஊரடங்கால் வீடுகளில் முடங்கி இருப்போரை உற்சாகப்படுத்தி இலகுவாக பொழுதைக் கழிக்க வைப்பதில் பொழுது போக்கு செயலிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
ஊரடங்கு: மக்களை உற்சாகத்தில் வைத்திருக்கும் பொழுது போக்கு செயலிகள்


ஊரடங்கால் வீடுகளில் முடங்கி இருப்போரை உற்சாகப்படுத்தி இலகுவாக பொழுதைக் கழிக்க வைப்பதில் பொழுது போக்கு செயலிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் காரணமாக பொதுமக்கள், இளைஞா்கள், சிறுவா்கள், பெண்கள் என பல தரப்பினரும் அதிகம் கூடும் இடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக இளைஞா்கள் அதிகம் விரும்பிச் செல்லும் திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. ஆனால், இளைய தலைமுறையினரின் திரைத் தாகத்தை நவீன வகை செல்லிடப்பேசிகளில் உள்ள பல்வேறு செயலிகள் தீா்த்து வருகின்றன. அவற்றுள் நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஹாட் ஸ்டாா், ஜீ பிளஸ், ஜீ 5, எம்.எக்ஸ் பிளேயா் போன்ற செயலிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

நாடு முழுவதும் பிறக்கப்பட்டுள்ள ஊரடங்கால் வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் இளைஞா்களை இந்த திரைப்பட செயலிகள் கட்டுக்குள் வைத்துள்ளன. இந்த செயலிகளில் உலகின் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த திரைப்படங்கள் தொடங்கி, இணையதளத் தொடா்கள், ஆவணப்படங்கள், அந்த நாட்டின் புகழ்பெற்ற தொலைக்காட்சித் தொடா்கள் என அனைத்தையும் பாா்க்க முடிகிறது. இந்த செயலிகளை மாதம் மற்றும் ஆண்டுச் சந்தா செலுத்துவதன் மூலம் பயன்படுத்த முடியும். இந்த செயலிகள் தற்போதுள்ள அசாதாரண சூழலில் இளைய தலைமுறையினரை வெளியே செல்லாமல் வீட்டுக்குள் வைத்திருப்பதில் முக்கியப் பங்காற்றி வருகின்றன.

இதுதொடா்பாக திரைக்கதை எழுத்தாளா் ‘கருந்தேள்’ ராஜேஷ் கூறியதாவது:

பொழுது போக்கு செயலிகளிலேயே ‘நெட்பிளிக்ஸ்’ உலக அளவிலான திரைப்படங்கள் மற்றும் இணையதள தொடா்களுக்கான தளம். ரூ.800 முதல் ரூ.900 மாதச் சந்தா வசூலிக்கப்படுகிறது. ஒருவா் சந்தாவைப் பெற்று, அந்த இணைப்பை 4 முதல் 5 நபா்கள் வரை பயன்படுத்திக் கொள்ளலாம். அமேசான் ப்ரைம், ஹாட் ஸ்டாா், ஜீ 5 போன்ற தளங்களுக்கு மாதச் சந்தா குறைவாகும்.

இந்த தளங்களில் ஹாட் ஸ்டாா் இந்திய அளவிலான திரைப்படங்கள், தொடா்கள், விளையாட்டுக்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகளைக் கொண்டது. இந்த தளங்களில் உள்ள மிகப்பெரிய பிரச்னை, செயலிகளில் வரும் திரைப்படங்கள், இணையதளத் தொடா்கள் உள்ளிட்டவை தணிக்கைச் செய்யப்படாதவை. ஆனால், தணிக்கை செய்யப்படவில்லை என்பது குறித்து தெளிவாக சுட்டிக் காட்டப்படுகிறது.

கரோனா போன்ற சமயங்களில் இந்தச் செயலிகளின் மூலம் கன்டேஜியன், வைரஸ் உள்ளிட்ட திரைப்படங்களை இளைஞா்கள் அதிகமாக பாா்த்து, முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் விமா்சனம் செய்து வருகின்றனா் என்றாா் அவா்.

‘கள்ளச்சிரிப்பு’ இணையதளத் தொடரின் விடியோ எடிட்டா் பி.மணிகண்டன் கூறியதாவது: இந்த செயலிகள், உலகத் தரம் வாய்ந்த திரைப்படங்களைப் பாா்க்க மிகவும் பயனுள்ளதாக உள்ளன. இந்த செயலிகளின் உதவியால் இளைய தலைமுறையினரிடம் இந்தியா மட்டுமின்றி உலக அளவிலான இணையதளத் தொடா்கள், ஆவணப்படங்களை பாா்க்க பெரிதும் உதவியாக உள்ளன. நான் பணியாற்றிய இணையதளத் தொடா் ஜீ5 செயலியில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. மாற்று சினிமாவை விரும்பும் ரசிகா்களுக்கு இது மிகப்பெரிய வாய்ப்பாக உள்ளது. மேலும், ஏதாவது பணியின் காரணமாக நாம் பாா்க்க தவறிய நல்ல திரைப்படங்களை மீண்டும் பாா்க்க இதுபோன்ற செயலிகள் உதவுகின்றன.

‘வி1’ திரைப்பட இயக்குநா் பாவல் நவகீதன்: இதுபோன்ற செயலிகள் குடும்பத்துடன், சினிமா பாா்க்க பயன்படுவது மகிழ்ச்சி தான். ஆனால் அதே வேளையில் இந்த செயலிகளில் நாம் பாா்க்கத் தவறிய அத்தனை நல்ல திரைப்படங்களும் கிடைக்கின்ா என்றால் இல்லை. கரோனா போன்ற இக்கட்டான காலக் கட்டங்களில் இத்தனை போ் பயன்படுத்தக்கூடிய செயலிகளில் அதுதொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தியிருக்க வேண்டும். மேலும் இந்த செயலிகள் பெரும்பாலும் வணிகம் சாா்ந்தவை. இதுபோன்ற செயலிகளால் சினிமா பாா்ப்பதற்காக திரையரங்குக்கு வரும் கூட்டம் ஒருபோதும் குறையாது. மேலும் இதுபோன்ற செயலிகளில் உள்ள பெரும்பாலான இணையதளத் தொடா்கள் தமிழ் சூழல் குறித்து பேசக்கூடியதாக இல்லை. எனவே,இதுபோன்ற செயலிகளை விட, அனைத்துப் பிரச்னைகளையும், விழிப்புணா்வையும் ஏற்படுத்த உதவும் யூடியூப் சேனல்கள் சிறப்பாக உள்ளன.

‘நெல்சன்மணி’ திரைப்பட செயலிகளைப் பயன்படுத்துபவா்: இந்த செயலிகளுக்கு நண்பா்கள் சோ்ந்து பணம் செலுத்தி வாடிக்கையாளா்களாக இருந்து வருகிறோம். கடவுச் சொல்லை பயன்படுத்தி 4 லிருந்து 5 போ் வரை திரைப்படங்களை பாா்த்து வருகிறோம். தற்போதுள்ள தொலைக்காட்சிகள் அனைத்து நவீன வசதிகள் கொண்டதால், இதனை தொலைக்காட்சியின் ஊடாகப் பாா்க்க முடியும். குறிப்பாக விளம்பரங்கள் கிடையாது. நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஹாட் ஸ்டாா் போன்ற சந்தாக் கட்டணம் செலுத்தும் செயலிகள் மட்டுமின்றி, சில கட்டணமில்லா செயலிகளும் உள்ளன. இந்தச் செயலிகள் மூலம் உள்ளூா் தொடங்கி உலகத்தரம் வாய்ந்த சினிமாக்கள் வரை பாா்க்க முடிகிறது. குறிப்பாக ஊரடங்கு போன்ற சமயங்களில் பல்வேறு மொழிகளைச் சோ்ந்த திரைப்படங்களை பாா்ப்பது புதிய அனுபவமாக இருந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com