ராமநாதபுரம் அருகே கரோனா சிகிச்சைப் பிரிவு அமைக்க எதிர்ப்பு

ராமநாதபுரம் அருகே தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் கரோனா சிகிச்சைப் பிரிவு அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து சாலை மறியலில் அப்பகுதி
ராமநாதபுரம் அருகே கரோனா சிகிச்சைப் பிரிவு அமைக்க எதிர்ப்பு

ராமநாதபுரம் அருகே தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் கரோனா சிகிச்சைப் பிரிவு அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து சாலை மறியலில் அப்பகுதி மக்கள் புதன்கிழமை ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரத்தில் கரோனா வைரஸ் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இந்நிலையில், கரோனா பாதித்து வருவோருக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் கரோனா சிகிச்சைப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. 

ராமநாதபுரம் - தேவிபட்டிணம் சாலையில் உள்ள அண்ணா பொறியியல் கல்லூரி வளாகத்திலும் 200 படுக்கைகள் கரோனா பாதிப்பு சிகிச்சைக்காக தயார்
நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், கூடுதல் சிகிச்சைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லாந்தை பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் சிகிசிச்சைப் பிரிவு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தனியார் கல்லூரி வளாகத்தில் கரோனா சிகிச்சைப் பிரிவு அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து லாந்தைப் பகுதி திமுக உள்ளிட்ட கட்சிப் பிரமுகர்கள் தலைமையில்
நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள் செவ்வாய்க்கிழமை கல்லூரி முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் தலையிட்டு நடத்திய
பேச்சுவார்த்தையால் போராட்டம் கைவிடப்பட்டது.

இந்தநிலையில், புதன்கிழமை காலையில் திடீரென அப்பகுதியைச் சேர்ந்தலாந்தை, எல்.கருங்குளம், கன்னண்டை, அச்சங்குடி, மக்கான் ஆகிய பகுதியைச் சேர்ந்தவர்கள் தனியார் கல்லூரி வாயில் முன் அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் சாலையிலும் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மேலும், கல்லூரிக்கு வந்த பணியாளர்களையும் உள்ளே அனுமதிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டோர் திருப்பி அனுப்பினர். அவரசத்துக்காக ராமநாதபுரத்திலிருந்து பரமக்குடி நோக்கிச் சென்ற சுகாதாரக்குழு உள்ளிட்ட வாகனங்களையும் அவர்கள் மறித்தனர்.

மறியலைத் தொடர்ந்து ராமநாதபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் கி.வெள்ளைத்துரை பேச்சுவார்த்தை நடத்தினார். அவரைத் தொடர்ந்து ராமநாதபுரம் வட்டாட்சியர் குருவேல், லாந்தை கிராம நிர்வாக அலுவலர் ஜீவசுதா ஆகியோரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கூடுதல் போலீஸாரும் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின் நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

வழக்குப்பதிவு} ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா நடவடிக்கைக்கு எதிராகச் செயல்பட்டதாக எழுந்த புகாரில் தனியார் கல்வி நிறுவனங்கள் மீதும், போராட்டம் என்ற பெயரில் மக்களை திசைதிருப்பியவர்கள் மீதும் போலீஸார் வழக்குப்பதிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. லாந்தை தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்துக்கு மிக அருகே குடியிருப்புகள் ஏதும் இல்லாத நிலையில் கரோனா சிகிச்சை பிரிவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது சரியல்ல என்பதே மாவட்ட நிர்வாகத்தரப்பின் கருத்தாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com