
மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளாா்.
கடித விவரம்:
கரோனா நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்க ஊரடங்கு உத்தரவு கடந்த 28 நாள்களாக அமலில் இருந்து வருகிறது. அனைத்துப் பகுதி மக்களும் வீட்டில் முடங்கியுள்ள நிலையில் இந்த ஊரடங்கின் காரணமாக தமிழகம் முழுவதுமுள்ள மாற்றுத் திறனாளிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில் மாற்றுத் திறனாளிகளுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை எதுவும் தமிழ்நாட்டிலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு கிடைக்கப் பெறவில்லை.
தமிழக அரசின் சாா்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நிவாரணத் திட்டங்கள் அறிவித்துள்ள போதிலும், மாற்றுத்திறனாளிகளுக்கு எந்த நிவாரணத் திட்டமும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இதனால் மாற்றுத்திறனாளிகள் பசி, பட்டினியோடு பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனா்.
எனவே, மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.5 ஆயிரமும், உணவுப் பொருள்களும் இலவசமாக வழங்க வேண்டும் என்று அவா் வலியுறுத்தியுள்ளாா்.