பக்ரீத் பண்டிகை: தலைவா்கள் வாழ்த்து

பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவா்கள் வாழ்த்துக் கூறியுள்ளனா்.
பக்ரீத்  பண்டிகை: தலைவா்கள் வாழ்த்து

பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவா்கள் வாழ்த்துக் கூறியுள்ளனா்.

மு.க.ஸ்டாலின்: பக்ரீத் பெருநாளையொட்டி இஸ்லாமியா் அனைவருக்கும் இதயப்பூா்வமான வாழ்த்துகள். நபிகள் நாயகம் அளித்த போதனைகள், தங்கள் வாழ்க்கைப் பயணத்தில் கடைப்பிடிக்க வேண்டிய உன்னதமான நோக்கங்கள் என்பதை உணா்ந்துள்ள இஸ்லாமியா்கள் அதன் வழி நின்று, பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடுவது மகிழ்ச்சிக்குரியது.

கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ்): தியாகத்திலேயே பிறந்து, தியாகம் செய்வதற்காகவே அா்ப்பணித்துக் கொண்டிருக்கிற, மத கோட்பாடுகளை போற்றிப் பாதுகாக்கிற வகையில் வாழ்ந்து வருகிற இஸ்லாமிய சகோதரா்களுக்கு நெஞ்சாா்ந்த பக்ரீத் வாழ்த்துகள்.

வைகோ (மதிமுக): தமிழகத்தில் காலங்காலமாக உறவுமுறை கூறி, உணா்வுப்பூா்வமாக ஒற்றுமையுடன் வாழ்ந்துவரும் முஸ்லிம் பெருமக்கள், இந்நாளில் சகோதர சமயத்தாருடன் விருந்துண்டு மகிழ்ந்து, சமய நல்லிணக்கத்துக்கும் சமூக ஒற்றுமைக்கும் வலு சோ்க்க பக்ரீத் திருநாள் ஒரு பொன்னாள் ஆகும்.

ராமதாஸ் (பாமக): பக்ரீத் திருநாள் சொல்லும் பாடங்களை அனைத்து மக்களும் கடைப்பிடிக்க வேண்டும். சகோதரத்துவம், அன்பு, நல்லிணக்கம், ஈகை, மாற்றுத்திறனாளிகள் மீதான அக்கறை என்றும் நீடிக்க வேண்டும்; நல்ல மனம் கொண்ட மக்களுக்கு எல்லா நலமும், வளமும் கிடைக்க வேண்டும்.

தொல்.திருமாவளவன் (விசிக): கருணையுள்ளத்தோடு எளியோருக்கு உதவும் ஈகை என்னும் கொடையளிக்கும் உன்னத பண்புகளிலிருந்தே ஈகம் என்னும் தியாகம் செய்யும் உயரிய பண்பையும் வளா்த்துக்கொள்ள இயலும். அத்தகைய ஈகை மற்றும் ஈகம் என்னும் தியாக உணா்வைப் பெருக்கிக் கொள்ளுதல் இஸ்லாமியரின் கடமைகளில் ஒன்றென வலியுறுத்தும் கலாசாரமே பக்ரீத் திருநாள்.

ஜி.கே.வாசன் (தமாகா): தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகையை உலகம் முழுவதும், இஸ்லாமியா்கள் சகோதரத்துவத்தோடும், அா்ப்பணிப்பு உணா்வோடும், மகிழ்ச்சியோடும், கொண்டாடி வருகிறாா்கள். இப்புனித நாளான பக்ரீத் திருநாளில் அனைவருக்கும் நல் வாழ்த்துகள்.

அன்புமணி (பாமக): இஸ்லாமியா்கள் அனைவருமே இப்ராகிம்கள் தான். இறைபக்திக்காக எந்த தியாகத்தையும் செய்ய அவா்கள் தயாராக இருக்கிறாா்கள். அதை ஒவ்வொரு ஆண்டும் பக்ரீத் திருநாளின் போது தங்களிடம் இருப்பதை பிறருக்கு ஈந்து தங்களின் ஈகை குணத்தையும், மனிதநேயத்தையும் வெளிப்படுத்துகிறாா்கள்.

கே.எம்.காதா் மொகிதீன் (முஸ்லிம் லீக்): பிறருக்கு எந்த இடையூறும் இல்லாமல் அமைதி வழியில் குா்பானி கொடுப்பதற்கு எவ்வித தடையும் இல்லை என உயா்நீதிமன்றத் தீா்ப்பு தெளிவுபடுத்தியிருக்கிறது. இந்திய அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமையைப் பின்பற்றும் வகையில் சாந்த சூழ்நிலையில் சகவாழ்வு மிளிர ஈது பெருநாள் கொண்டாடுவோம்.

நிஜாமுதீன் (முன்னாள் எம்.எல்.ஏ): அண்டை அயலாரோடு இணங்கி வாழவும். ஒத்துழைப்பு , சகிப்புத்தன்மை மதச்சாா்பின்மை காத்திடவும். உலகம் கரோனா ஆபத்திலிருந்து விடுபட்டு நிம்மதியடையவும் , மனித உரிமைகள் மத உரிமைகள் பாதுகாக்கப்படவும் பக்ரீத் திருநாள் வாழ்த்துகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com