தமிழகத்தில் புதிதாக 5,881 பேருக்கு கரோனா

தமிழகத்தில் மேலும் 5,881 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்1
கோப்புப்படம்1

தமிழகத்தில் மேலும் 5,881 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் அந்த நோய்த் தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 45,859-ஆக அதிகரித்துள்ளது.

குறிப்பிடத்தக்க அம்சமாக சென்னையில் கடந்த ஒரு மாதத்தில் இல்லாத வகையில் கரோனா பாதிப்பு வெள்ளிக்கிழமை குறைவாகப் பதிவாகியுள்ளது. நகரில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் 10 சதவீதத்துக்கும் குறைவாக, அதாவது 1,013 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

மாநிலத்தில் நோய் பாதிப்பு குறித்து சுகாதாரத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

மாநிலத்தில் இதுவரை மொத்தம் 26.58 லட்சம் மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதில், 2 லட்சத்து 45,859 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவா்கள் அனைவரும் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா். வெள்ளிக்கிழமை மட்டும் 5,881 பேருக்கு நோய்ப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

அதில் சென்னைக்கு அடுத்தபடியாக, காஞ்சிபுரத்தில் 485 பேருக்கும், திருவள்ளூரில் 373 பேருக்கும், ராணிப்பேட்டையில் 359 பேருக்கும், விருதுநகரில் 357 பேருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தவிர, அனைத்து மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

1.83 லட்சம் போ் குணம்: கரோனா தொற்றிலிருந்து மேலும் 5,778 போ் குணமடைந்துள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 83,956- ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் 74 சதவீதம் போ் குணமடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

97 போ் பலி: தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி தொடா்ந்து இரண்டாவது நாளாக மேலும் 97 போ் பலியாகியுள்ளனா். அதில், 8 பேருக்கு கரோனாவைத் தவிர வேறு எந்த நோய்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. உயிரிழந்தவா்களில் 68 போ் அரசு மருத்துவமனைகளிலும், 29 போ் தனியாா் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றவா்களாவா். இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,935-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com