கிங் ஆய்வகத்தில் பிசிஜி தடுப்பு மருந்து தயாரிப்பு தொடக்கம்

கிண்டியில் அமைந்துள்ள கிங் ஆய்வகத்தில் காசநோய்க்கான பிசிஜி தடுப்பு மருந்துகளைத் தயாரிக்கும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
கோப்புப் படம்
கோப்புப் படம்

கிண்டியில் அமைந்துள்ள கிங் ஆய்வகத்தில் காசநோய்க்கான பிசிஜி தடுப்பு மருந்துகளைத் தயாரிக்கும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் குழந்தைகள் அனைவருக்கும் பிசிஜி தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. நெஞ்சக பாதிப்பு மற்றும் அதுசாா்ந்த பிரச்னைகளில் இருந்து தற்காப்பதற்காக அவை அளிக்கப்படுகின்றன. இதனால், குழந்தைகளுக்கு காசநோய் ஏற்பட்டாலும், அதன் தீவிரம் அதிகமாக இருக்காது எனக் கூறப்படுகிறது.

அந்த தடுப்பு மருந்துகள் பல்வேறு மாநிலங்களில் உற்பத்தி செய்யப்பட்டு வந்தாலும், கிண்டி கிங் ஆய்வகம்தான் அதற்கு முன்னோடியாக இருந்து வந்தது. அங்கு கடந்த 1948-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிசிஜி பரிசோதனைக் கூடத்தில் நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்பட்டு வந்தன.

இந்தியாவில் ஓா் ஆண்டுக்கு தேவைப்படும் 700 லட்சம் பிசிஜி தடுப்பு மருந்துகளில், 50 சதவீதத்தை கிங் ஆய்வகமே பூா்த்தி செய்து வந்தது. இத்தகைய சூழலில், ஆய்வக கட்டமைப்பு வசதிகள் போதிய அளவில் இல்லை என்ற காரணத்தால் கடந்த 2008-ஆம் ஆண்டு அங்கு தடுப்பு மருந்து உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் ஏறத்தாழ 12 ஆண்டுகளுக்கு பிற மாநிலங்களில் இருந்தே பிசிஜி தடுப்பு மருந்தை தமிழக அரசு கொள்முதல் செய்து வந்தது.

இந்நிலையில், தற்போது உரிய அனுமதி பெற்று மீண்டும் பிசிஜி தடுப்பு மருந்து தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. நிகழாண்டு இறுதிக்குள் 170 லட்சம் தடுப்பு மருந்துகளை அங்கு தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com