திருவாரூரில் டாஸ்மாக் கடையைத் திறக்கக்கோரி பொதுமக்கள் போராட்டம்

திருவாரூர் மாவட்டம் கோட்டூரில்,  டாஸ்மாக் மதுக்கடையை திறக்க வலியுறுத்தி, அனைத்து அரசியல் கட்சிகளின் சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்

திருவாரூர் மாவட்டம் கோட்டூரில்,  டாஸ்மாக் மதுக்கடையை திறக்க வலியுறுத்தி, அனைத்து அரசியல் கட்சிகளின் சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மன்னார்குடி அடுத்துள்ள கோட்டூரில் அடைப்பாறு தலைப்பு அருகே புதிதாக டாஸ்மாக் கடையினை திறக்க மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் முடிவெடுத்து  அதற்காக வாடகைக் கட்டடத்தை தேர்வு செய்திருந்தது.

மதுக்கடையை திறக்க கடந்த பிப்ரவரி மாதம் முடிவு எடுத்திருந்த நாளில், அரசுப் பள்ளி மாணவியர் விடுதி , குடியிறுப்பு பகுதி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகியவை மதுக்கடை அமையும் இடம் அருகே இருப்பதாகவும், இதனால் அனைத்து தாப்பினரும் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறி ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து மதுக்கடை திறப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், ஜூலை மாதம் 18 மற்றும் 30 ஆம் தேதிகளில் மீண்டும் மதுக்கடையை திறக்க முயன்ற போது, மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மதுக்கடையை திறக்க வேண்டும் என வலியுறுத்தி மற்றொரு தரப்பினர் அங்கு திரண்டு வந்ததால் பரபரப்பு நிலவியது. பின் காவல்துறையினர், டாஸ்மாக் நிர்வாகத்தினர் இரு தரப்பினரிடம் பேச்சு வார்த்தை நடத்தி, இப்பிரச்னையில் ஒருமித்த கருத்து எட்டப்படும் வரை தற்போது உள்ள நிலை நீடிக்கும் என முடிவு எடுக்கப்பட்டது. தற்போது வரை மதுக்கடை திறக்கப்படவில்லை.

கோட்டூரில் மதுக்கடை இல்லாததால், மதுப் பிரியர்கள் மதுக்கடையுள்ள வேறு ஊருக்கு செல்வதால் தேவையில்லாத பிரச்னைகள் ஏற்படுவதாகவும், டாஸ்மாக் மதுபாட்டில்களை , சிலர் சட்ட விரோதமாக கடத்தி வந்து, கோட்டூரில் வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதால் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதாக தெரிவித்தனர்.
எனவே கோட்டூரில் அடப்பாறு தலைப்பிலேயே டாஸ்மாக் கடையை உடனடியாக திறக்க வேண்டும் என வலியுறுத்தி கோட்டூர் பேருந்து நிறுத்தம் அருகே, அனைத்து அரசியல் கட்சிகளின் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, வர்த்தக சங்கத் தலைவர் எம்.துரைராஜ் தலைமை வகித்தார்.

இதில் 50 பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு கோரிக்கை முழுக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

பின்னர், அருகிலிருந்த காவல் நிலையத்திற்கு சென்ற போராட்டக் குழு நிர்வாகிகள், திருத்துறைப்பூண்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் பழனிசாமியை சந்தித்துக்  கோரிக்கை மனுவினை அளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com