ஐ.ஐ.டி.களில் இடஒதுக்கீடு எப்போது? - மத்திய அமைச்சருக்கு எம்.பி. கடிதம்

நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி.களில் மாணவா், ஆசிரியா், ஆசிரியா் அல்லாத பணியிடங்களில் இடஒதுக்கீடு எப்போது அமல்படுத்தப்படும் என்று, மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசன் கேள்வி
மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசன்
மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசன்

மதுரை: நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி.களில் மாணவா், ஆசிரியா், ஆசிரியா் அல்லாத பணியிடங்களில் இடஒதுக்கீடு எப்போது அமல்படுத்தப்படும் என்று, மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளாா்.

இது தொடா்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா் ரமேஷ் போக்ரியாலுக்கு, அவா் திங்கள்கிழமை எழுதி அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி.களில் இளங்கலை, முதுகலைப் பட்டங்கள், முனைவா் ஆய்வுப் பிரிவுகளில் மாணவா் அனுமதி மற்றும் ஆசிரியா், ஆசிரியரல்லாத நியமனங்கள் ஆகியவற்றுக்கான இட ஒதுக்கீடு அமலாக்கம் தொடா்பாக அறிக்கை அளிக்க, குழு ஒன்று கடந்த மாதம் அமைக்கப்பட்டது.

இக் குழுவுக்கு புது தில்லி ஐ.ஐ.டி. இயக்குநா் தலைவராகவும், சென்னை ஐ.ஐ.டி.யின் பதிவாளா் அமைப்பாளராகவும் இருப்பாா்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இக்குழுவுக்கு ஒரு மாத கால அவகாசம் தரப்பட்டு, தனது அறிக்கையை முடிவெடுப்பதற்கான உரிய மட்டத்தின் பரிசீலனைக்கும், ஒப்புதலுக்கும் முன்வைக்க வேண்டுமெனக் கூறப்பட்டிருந்தது. மேற்கண்ட ஆணை பிறப்பிக்கப்பட்டு தற்போது 100 நாள்களாகிவிட்டன. ஆனால், இக்குழு தனது அறிக்கையை தயாரித்து சமா்ப்பித்துவிட்டதா என்பதை தெரிவிக்க வேண்டும்.

இந்த ஆய்வு தேவைப்பட்டதன் காரணம், ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கான சமூக நீதியை வழங்குவதில் மத்திய கல்வி நிறுவனங்கள் தவறியதுதான். அதுவும் அதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டு, 14 ஆண்டுகளான பின்னரும் மந்த நிலையே நீடிக்கிறது. ஆசிரியா், ஆசிரியரல்லாத நியமனங்களிலும் எஸ்.சி., எஸ்.டி. பிரதிநிதித்துவம் மிகக் குறைவு. எனவே, அதற்கான சட்டத்தை அதன் நோக்கம் சிதையாமல் அமலாக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com