பணிபுரியும் நிறுவனங்கள் மூலம் பயண அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம்: மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ்

வெளி மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்குப் பணி நிமித்தமாக வருவோர் அவர்கள் பணிபுரியும் நிறுவனங்கள்
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்


சென்னை: வெளி மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்குப் பணி நிமித்தமாக வருவோர் அவர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் மூலம் இணைய வழி பயண அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சி அடையாறு மண்டலத்துக்கு உள்பட்ட வேளச்சேரி-தரமணி இணைப்புச் சாலையில் ராஜஸ்தானி  ஹெல்த் பவுண்டேசன் என்ற அமைப்பு சார்பில் தனியார் விடுதியில் அமைக்கப்பட்டுள்ள இலவச கரோனா சிகிச்சை மைய தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. 

இந்த விழாவில் சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டு திறந்து வைத்தனர். இதைத் தொடர்ந்து, ஆணையர் கோ.பிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறியது: 
கரோனா நோய்த் தொற்று காரணமாக சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் மீண்டும் பணிக்காக சென்னை திரும்ப கடந்த 2 நாள்களாக இணைய வழி பயண அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, நாளொன்றுக்கு 500 முதல் 1,000 பேருக்கு பயண அனுமதி வழங்கப்படுகிறது. 

வெளி மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து பணி நிமித்தமாக சென்னைக்கு வருவோர் அவர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் மூலம் இணைய வழி பயண அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம். தொழிலாளர் நலத் துறையின் அறிவுறுத்தல்படி, வெளி மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வரும் தொழில் நிறுவனங்கள், தொழிலாளர்களின் முழு விவரத்தை மாநகராட்சிக்கு அளிப்பதுடன், அவர்களை கண்டிப்பாக 14 நாள்களுக்கு தனிமைப்படுத்தி வைத்திருக்க வேண்டும். 

அதற்கான அனைத்து வசதிகளையும் தொழிற்சாலை வளாகத்தில் செய்திருக்க வேண்டும். இதை மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பர். சென்னையைப் பொருத்தவரை அடுத்த 3 மாதங்களுக்கு அதே நடைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும். சென்னைக்கு முழுமையாக தளர்வுகளை விலக்குவது என்பது தற்போதைய சூழ்நிலையில் முடியாத ஒன்றாகும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com