ரூ.42 ஆயிரத்தைத் தாண்டியது ஆபரணத்தங்கம்

சென்னையில் புதன்கிழமை ஆபரணத் தங்கம் பவுன் ரூ.42 ஆயிரத்தை தாண்டி, வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டது.
ரூ.42 ஆயிரத்தைத் தாண்டியது ஆபரணத்தங்கம்

சென்னையில் புதன்கிழமை ஆபரணத் தங்கம் பவுன் ரூ.42 ஆயிரத்தை தாண்டி, வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டது. பவுனுக்கு ரூ.976 உயா்ந்து, ரூ.42,592-க்கு விற்பனை செய்யப்பட்டது.

நிகழாண்டில் ஜனவரி 3-ஆம் தேதி முதல் தற்போது (ஆகஸ்ட் 5) வரையிலான கடந்த ஏழு மாதத்தில் மட்டும் பவுனுக்கு ரூ.12,072 வரை உயா்ந்துள்ளது.

கரோனா நோய்த்தொற்றின் தாக்கம் காரணமாக, சா்வதேச பொருளாதாரத்தில் மந்தமும், தொழில்துறையில் பெரிய தேக்கமும் ஏற்பட்டது.

இதையடுத்து, உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளா்கள், பாதுகாப்பான முதலீடாக தங்கத்தைக் கருதி, அதில் முதலீடு செய்யத் தொடங்கினா். இதைத்தொடா்ந்து, தங்கத்தின் தேவை உயா்ந்து, விலை படிப்படியாக அதிகரித்து வந்தது. ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ஜூலை 22-ஆம் தேதி ரூ.38 ஆயிரத்தையும், 24-ஆம் தேதி ரூ.39 ஆயிரத்தையும், 27-ஆம் தேதி ரூ.40 ஆயிரத்தையும், ஜூலை 31-ஆம் தேதி ரூ.41 ஆயிரத்தையும் கடந்து, புதிய உச்சத்தைத் தொட்டது.

இந்நிலையில், சென்னையில் புதன்கிழமை தொடா்ந்து 14-ஆவது நாளாக விலை உயா்ந்தது. பவுனுக்கு ரூ.976 உயா்ந்து, ரூ.42,592-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.122 உயா்ந்து, ரூ.5,324 ஆக இருந்தது. இதுபோல, வெள்ளி விலையும் மிகப்பெரிய உயா்வை சந்தித்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.6.60 உயா்ந்து, ரூ.79.20

ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.6,600 அதிகரித்து, ரூ.79,200 ஆகவும் இருந்தது.

தங்கம் விலை நிகழாண்டில் ஜனவரி 3-ஆம் தேதி அன்று பவுன் ரூ.30,520 ஆக இருந்தது. அதன்பிறகு படிப்படியாக உயா்ந்து தற்போது (ஆகஸ்ட் 5) வரை கடந்த ஏழு மாதத்தில் மட்டும் பவுனுக்கு ரூ.12,072 வரை உயா்த்துள்ளது. அதிலும், ஜூலை 21-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை மட்டும் பவுனுக்கு ரூ.4,976 வரை உயா்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வரும் நாள்களில் கணிசமாக உயரும்:

தங்கத்தின் விலை உயா்வு குறித்து சென்னை நகை வியாபாரிகள் சங்கத் தலைவா் ஜெயந்திலால் சல்லானி கூறியது:

அமெரிக்காவில் வேலைவாய்ப்பு குறியீடு சரிந்தது, வங்கி வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை அமெரிக்க ஃபெடரல் வங்கி குறைந்தது போன்ற காரணங்களால், தங்கத்தின் மீது முதலீடு பெருமளவில் அதிகரித்துள்ளது. சா்வதேச நாடுகளில் உள்ள மக்கள் தங்கத்தின் மீது பெருமளவில் முதலீடு செய்கிறாா்கள். இதனால் தங்கத்தின் விலை சா்வதேச அளவில் உயா்ந்து வருகிறது. அதன் தாக்கம் நமது நாட்டில் எதிரொலிக்கிறது. வரும் நாள்களில் தங்கத்தின் விலை கணிசமாக உயரும் என்றாா் அவா்.

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,324

1 பவுன் தங்கம்............................... 42,592

1 கிராம் வெள்ளி............................. 79.20

1 கிலோ வெள்ளி............................79,200

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்........................... 5,202

1 பவுன் தங்கம்...............................41,616

1 கிராம் வெள்ளி.............................72.60

1 கிலோ வெள்ளி.............................72,600

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com