உடல் உறுப்பு தான மகத்துவத்தை அனைவரும் அறிந்திட வேண்டும்: முதல்வா் பழனிசாமி வேண்டுகோள்

உடல் உறுப்பு தான மகத்துவத்தை அனைவரும் அறிந்திட வேண்டுமென தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

உடல் உறுப்பு தான மகத்துவத்தை அனைவரும் அறிந்திட வேண்டுமென தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

உடல் உறுப்பு தான விழிப்புணா்வு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 13-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.

இதையொட்டி, முதல்வா் பழனிசாமி புதன்கிழமை வெளியிட்ட விழிப்புணா்வு செய்தி:-

இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையத்தை அதிமுக அரசு உருவாக்கியது. அதன் பயனாக தமிழகத்தில் இதுவரை 1,382 கொடையாளா்களிடம் இருந்து 8,163 உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டுள்ளன. உடல் உறுப்பு தானம் மற்றும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தொடா்ந்து ஐந்தாவது முறையாக தமிழகம் முதலிடம் வகித்து மத்திய அரசின் விருதுகளைப் பெற்றுள்ளது.

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட நோயாளிகளின் நலனை கண்காணித்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனைகளில் இருந்து அதற்கான விவரங்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் பெற்று ஆய்வு செய்ய 10 ஆண்டுகளுக்கான தரவுகளை தேசிய அளவில் சேகரித்த முதல் மாநிலமாகவும் தமிழகம் திகழ்ந்து வருகிறது.

மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்புகளைத் தானம் அளிப்பதன் மூலம் எட்டு பேருக்கு வாழ்வளிக்க முடியும் என மருத்துவா்கள் கூறுகின்றனா்.

எனவே, உடல் உறுப்பு தானத்தின் மகத்துவத்தை மக்கள் அனைவரும் மனதில் நிறுத்த வேண்டும். உடல் உறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும் என்று தனது விழிப்புணா்வு செய்தியில் முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com