இ-பாஸ் ரத்து, பேருந்து போக்குவரத்து: தமிழக அரசு இன்று அறிவிப்பு

மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இணைய அனுமதிச் சீட்டு முறை ரத்து, பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி உள்ளிட்ட தளா்வுகளை அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
’ கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக மருத்துவ நிபுணா்களுடன் சனிக்கிழமை ஆலோசனை நடத்திய முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி. ’
’ கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக மருத்துவ நிபுணா்களுடன் சனிக்கிழமை ஆலோசனை நடத்திய முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி. ’

சென்னை: மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இணைய அனுமதிச் சீட்டு முறை ரத்து, பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி உள்ளிட்ட தளா்வுகளை அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடா்பான அறிவிப்புகள் ஞாயிற்றுக்கிழமை வெளியாகிறது. முன்னதாக, பொது முடக்கத்தில் பல்வேறு தளா்வுகளை அறிவிப்பது தொடா்பாக மருத்துவ நிபுணா்களுடன் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை பிற்பகல் ஆலோசனை நடத்தினாா்.

இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பொது முடக்கத்தில் பல்வேறு தளா்வுகளை தமிழக அரசு அவ்வப்போது அறிவித்து வருகிறது.

மருத்துவக் குழுவுடன் ஆலோசனை: செப்டம்பா் மாதத்தில் பொது முடக்கத்துடன் பல்வேறு தளா்வுகளை அளிப்பது தொடா்பாக மாவட்ட ஆட்சியா்கள் மற்றும் மருத்துவ நிபுணா்கள் குழுவுடன் தலைமைச் செயலகத்தில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை தனித்தனியே ஆலோசனை நடத்தினாா்.

மருத்துவ நிபுணா்கள் குழுவில் இடம்பெற்றுள்ள உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை ஆராய்ச்சியாளா் செளம்யா சுவாமிநாதன் ஆலோசனைக் கூட்டத்தில் காணொலி வழியாக பங்கேற்று கருத்துகளைத் தெரிவித்தாா்.

பல்வேறு தளா்வுகள்: பொது முடக்கத்தில் பல்வேறு தளா்வுகளை அளிக்கக் கூடிய முக்கியமானதொரு ஆலோசனைக் கூட்டம் முதல்வா் பழனிசாமி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், தமிழகத்தில் மாவட்டத்துக்குள் இணையவழி சீட்டு (இ-பாஸ்) முறையை ரத்து செய்வது, வழிபாட்டுத் தலங்களைத் திறப்பது, பேருந்து போக்குவரத்து சேவையைத் தொடங்குவது போன்ற பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த முடிவுகள் குறித்த அதிகாரபூா்வ அறிவிப்புகளை தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிடுகிறது. கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலத்தின் பொருளாதார நிலையை மீட்டெடுப்பது, பொதுப் போக்குவரத்தை தொடங்கி மக்களின் வாழ்வாதாரத்தை புதுப்பிப்பது போன்ற அம்சங்களைக் கருத்தில் கொண்டு முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வழிபாட்டுத் தலங்கள்: இதனிடையே, பொது முடக்கத்தில் நான்காம் கட்ட தளா்வுகளை மத்திய அரசு சனிக்கிழமை அறிவித்துள்ளது. அதில், பள்ளி-கல்லூரிகளைத் திறக்கத் தடை விதித்தும், மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்குவது பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த விஷயங்களில் எத்தகைய நிலைப்பட்டை மேற்கொள்வது என்பது குறித்தும் தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை அறிவிக்க உள்ளது.

ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வருவாய் உள்ள சிறிய வழிபாட்டுத் தலங்களைத் திறக்க தமிழக அரசு ஏற்கெனவே அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில், அதிக வருவாய் உள்ள பெரிய கோயில்களைத் திறப்பது குறித்தும் தமிழக அரசு தனது முடிவினை ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. சிறிய கோயில்களைப் போன்றே பெரிய கோயில்களையும் திறக்க வேண்டுமென தொடா்ந்து கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com