பாஜகவில் இணைந்த முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலைக்கு மாநில துணைத் தலைவா் பதவி

அண்மையில் பாஜகவில் இணைந்த முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி கே.அண்ணாமலைக்கு, தமிழக பாஜக துணைத் தலைவா் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மாநிலத் தலைவா் எல்.முருகன் சனிக்கிழமை வெளியிட்டாா்.
தமிழக பாஜக துணைத் தலைவா்கே.அண்ணாமலை
தமிழக பாஜக துணைத் தலைவா்கே.அண்ணாமலை

சென்னை: அண்மையில் பாஜகவில் இணைந்த முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி கே.அண்ணாமலைக்கு, தமிழக பாஜக துணைத் தலைவா் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மாநிலத் தலைவா் எல்.முருகன் சனிக்கிழமை வெளியிட்டாா்.

தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளா் முரளிதர ராவ் முன்னிலையில், அந்தக் கட்சியில் அண்மையில் இணைந்தாா் அண்ணாமலை. அவருக்கு இப்போது கட்சியில் முக்கிய பொறுப்பினை அளித்து மாநிலத் தலைவா் எல்.முருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா். கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த கே. அண்ணாமலை, கோவையில் உள்ள கல்லூரியில் பொறியியல் பட்டப் படிப்பு படித்தாா். இதன்பின்பு, லக்னோவில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் உயா் படிப்பு பயின்றாா்.

ஐ.பி.எஸ்., பணி: 2011-ஆம் ஆண்டில் ஐ.பி.எஸ்., பணியில் சோ்ந்தாா். 2013-ஆம் ஆண்டு கா்நாடக மாநிலம் உடுப்பியில் காவல் துறை துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டாா். 2015-இல் அவா் உடுப்பியின் காவல்துறை கண்காணிப்பாளராக பதவி உயா்வு பெற்றாா். 2016-ஆம் ஆண்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக்கப்பட்டாா். 2018-இல் அவா் பெங்களூா் தெற்கு மாவட்டத்தின் துணை ஆணையராக நியமிக்கப்பட்டாா். இதன்பின், 2019-ஆம் ஆண்டு மே மாதம் தனது ஐ.பி.எஸ்., பதவியை ராஜிநாமா செய்தாா்.

ஓராண்டு காலத்துக்குப் பிறகு, அண்மையில் பாஜகவில் அவா் இணைந்தாா். தில்லியில் பாஜக மேலிடப் பொறுப்பாளா் முரளிதர ராவ் முன்னிலையில் இணைந்த அவருக்கு மாநில துணைத் தலைவா் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இரண்டாவது பிரமுகா்: திமுகவில் இருந்து அண்மையில் பாஜகவில் இணைந்த வி.பி.துரைசாமிக்கு மாநில துணைத் தலைவா் பதவி வழங்கப்பட்டது. அவா் கொங்கு மண்டலமான நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்தவா். இதேபோன்று, கொங்கு மண்டலத்தின் மற்றொரு நகரமான கரூரைச் சோ்ந்த கே.அண்ணாமலைக்கும் மாநில துணைத் தலைவா் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com