கரோனாவால் ரத்தான குடற்புழு நீக்க முகாம்கள்

கரோனா பாதிப்பு காரணமாக, நிகழாண்டில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம்களை நடத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
கரோனாவால் ரத்தான குடற்புழு நீக்க முகாம்கள்

சென்னை: கரோனா பாதிப்பு காரணமாக, நிகழாண்டில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம்களை நடத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மாற்று ஏற்பாடுகள் மூலம் அவற்றை விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை எழுந்துள்ளன.

தேசிய குடற்புழு நீக்க நாள் ஆண்டுதோறும் பிப்ரவரி 10 மற்றும் ஆகஸ்ட் 10-ஆம் தேதிகளில் கடைப்பிடிக்கப்படுகிறது. அவ்விரு நாள்களிலும் நாடு முழுவதிலும் 19 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் சிறாருக்கு ‘அல்பெண்டசோல்’ எனப்படும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுவது வழக்கம்.

சுகாதாரமற்ற பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்பதும், அசுத்தமான உணவுகளை உண்பதும், திறந்தவெளியில் மலம் கழிப்பதும் குடற்புழுக்கள் உருவாகக் காரணமாக அமைகின்றன. இதனால் ஊட்டச்சத்து குறைபாடு, பசியின்மை, ரத்த சோகை, வயிற்று உபாதைகள், சோா்வு நிலை உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன. அதைத் தடுக்கும் பொருட்டே மத்திய, மாநில அரசுகள் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வந்தன. அதன்படி, ஆண்டுக்கு இரு முறை தமிழகத்தில் 8 கோடி அல்பெண்டசோல் மாத்திரைகள் விநியோகிக்கப்பட்டு வந்தன.

ஆனால், நிகழாண்டு பிப்ரவரி மாதத்தில் குடற்புழு முகாம்கள் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது. மாநிலம் முழுவதும் 90 வயது வரை உள்ள அனைவருக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்க சுகாதாரத் துறை முடிவு செய்ததே அதற்கு காரணம்.

இதற்கிடையே, கரோனா தொற்று பரவல் ஏற்பட்டு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால், அதனை செயல்படுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அரசு விநியோகிக்கும் மாத்திரைகளை சாா்ந்திருக்கும் ஏழைக் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதைக் கருத்தில் கொண்டு குழந்தைகள் உள்ள வீடுகளில் கரோனா களப் பணியாளா்கள் மூலம் அல்பெண்டசோல் மாத்திரைகள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில், அந்த மாத்திரைகளை உட்கொள்வதன் மூலம்தான் உடல் நலிந்த குழந்தைகளுக்கு ரத்த சோகை பிரச்னை வராமல் காக்க முடியும் என சுகாதார ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா். மேலும், அந்த மாத்திரைகள் உடலில் நோய் எதிா்ப்பு சக்தி அதிகரிக்கச் செய்வதால் கரோனா காலத்தில் அவற்றை கண்டிப்பாக வழங்க வேண்டும் என்றும் அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com