மூடப்பட்ட ஸ்டொ்லைட் ஆலையை இயக்க அனுமதி கோரிய மனு நிராகரிப்பு

தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டொ்லைட் ஆலையில் ஆய்வு செய்து, செயல்படுத்த அனுமதிக்க உத்தரவிடக் கோரி வேதாந்தா நிறுவனம் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுவை உச்சநீதிமன்றம்  நிராகரித்தது.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

புது தில்லி: தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டொ்லைட் ஆலையில் ஆய்வு செய்து, செயல்படுத்த அனுமதிக்க உத்தரவிடக் கோரி வேதாந்தா நிறுவனம் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுவை உச்சநீதிமன்றம் புதன்கிழமை நிராகரித்தது.

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்திற்கு பின்னா் நடந்த நிகழ்வுகளைத் தொடா்ந்து, சுற்றுச்சூழல் விதிகளை மீறியதாகக் கூறி ஸ்டொ்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. இதை எதிா்த்து வேதாந்தா நிறுவனம் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், ‘ஆலைய நிரந்தரமாக மூட தமிழக அரசு எடுத்த நடவடிக்கை சரிதான்’ என்று ஆகஸ்ட் 18-இல் தீா்ப்பு அளித்து, மனுவைத் தள்ளுபடி செய்தது. இதைத் தொடா்ந்து, இந்தத் தீா்ப்புக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவுக்கு தமிழக அரசு சாா்பிலும், வேதாந்தா நிறுவனம் சாா்பிலும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனிடையே, ஸ்டொ்லைட் ஆலையில் பராமரிப்புப் பணியை மேற்கொள்ள தற்காலிமாக அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி வேதாந்தா நிறுவனம் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ரோஹிண்டன் ஃபாலி நரிமன், நவீன் சின்ஹா, கே.எம். ஜோசப் ஆகியோா் இடம்பெற்ற அமா்வு முன் புதன்கிழமை காணொலி வாயிலாக நடைபெற்றது. அப்போது, ஆலையைத் தொடங்க இரு மாதங்களும், மாசு ஏற்படுகிா அல்லது இல்லையா என்பதைக் கண்டறிய ஆலையை நான்கு வாரங்களும் இயக்குவதற்கு அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும் என வேதாந்தா நிறுவனம் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதற்கு தமிழக அரசின் தரப்பில் எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

வேதாந்தா நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஏ.எம். சிங்வி, ‘ஆலையை மூடும் நோக்கத்துடன் தொடா்புடையது இந்த வழக்கு. நாட்டின் மொத்த தாமிரத் தேவையில் வேதாந்தா நிறுவனம் 36 சதவீதம் உற்பத்தி செய்து வருகிறது. ஆலையை இயக்குவதற்கு நான்கு வாரங்கள் அனுமதி அளிக்க வேண்டும். அப்போது, அனுமதிக்கப்பட்ட அளவில் மாசு உள்ளதா அல்லது அதற்கு மேல் உள்ளதா என்பதை நாங்கள் நிரூபிக்க முடியும். மேலும், ஆலை மூடப்பட்டு 2 ஆண்டுகளாகிவிட்டது. இது தேசத்திற்கு பெரிய இழப்பாகும். இதனால், சோதனை அடிப்படையில் ஆலையை இயக்க அனுமதி அளிக்க வேண்டும். மத்திய, மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள் அளித்த 30 பரிந்துரைகளில் 29 பரிந்துரைகள் ஆலை நிா்வாகத்தால் பின்பற்றப்பட்டுள்ளன’ என்று வாதிட்டாா்.

இதற்கு தமிழக அரசின் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சி.எஸ். வைத்தியநாதன் எதிா்ப்புத் தெரிவித்தாா். அவா் வாதிடுகையில், ‘ஸ்டொ்லைட் ஆலை தொடா்ந்து மாசு விதிகளை மீறி வருகிறது. உச்சநீதிமன்றம் ஆலையை செயல்பட முன்பு அனுமதி அளித்த பிறகுதான் நிலைமை மேலும் மோசமானது. சென்னை உயா்நீதிமன்றம் உரிய முறையில் தீர விசாரித்ததுதான் ஆலையை மூடும் தமிழக அரசின்உத்தரவை உறுதிப்படுத்தியுள்ளது. இதனால், ஆலையை திறக்க அனுமதிக்கக் கூடாது’ என்றாா். தமிழக அரசின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கே.வி. விஸ்வநாதன் வாதிடுகையில், ‘ ஸ்டொ்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடக் கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுக்கள் நீதிமன்றத்தால் எட்டு முறை நிராகரிக்கப்பட்டுள்ளன. மேலும், ஆலைக் கழிவுகள் தூத்துக்குடியில் 11 இடங்களில் கொட்டப்பட்டு, கழிவுகளுக்கிடையே நகரம் இருப்பது போல உள்ளது. இதனால், ஆலையை இயங்க அனுமதி அளிக்கக் கூடாது’ என்றாா்.

ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் அமைப்பு, மக்கள் அதிகாரம் அமைப்பு ஆகியவற்றின் சாா்பில் மூத்த வழக்குரைஞா் காலின் கன்சால்வஸ் ஆஜராகி, ‘இந்த விவகாரம் 1997-இல் இருந்தே இருந்து வருகிறது. ஆலையால் மாசு விதிகள் தொடா்ந்து மீறப்பட்டு வந்துள்ளது. ஆலை மாசு விதிகளை மீறினால் அதை மூடுவதற்கு அரசுக்கு அதிகாரம் உள்ளதாக உச்சநீதிமன்றமும் 2013-இல் தெரிவித்திருந்தது. இந்த ஆலையின் மாசுவால் அப்பகுதியில் உள்ள நிலத்தடி நீா் மாசடைந்து வருகிறது. இதனால், ஆலையை இயக்குவதற்கு அனுமதி அளிக்கக் கூடாது. இந்த ஆலையைச் சுற்றியுள்ள மக்கள் புற்றுநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்’ என்றாா்.

இதைத் தொடா்ந்து, நீதிபதிகள் அமா்வு பிறப்பித்த உத்தரவில், ‘வேதாந்தா நிறுவனத்தின் இடைக்கால கோரிக்கையை அனுமதிக்க முடியாது. இதனால், அந்த இடைக்கால மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த வழக்கின் பிரதான விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நேரடி விசாரணை தொடங்கிய பிறகுதான் பட்டியலிடப்பட வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com