மருத்துவக் கலந்தாய்வில் போலி சான்றிதழ்: தந்தை-மகள் மீது வழக்கு

சென்னையில் நடைபெற்று வரும் மருத்துவக் கலந்தாய்வில் போலி நீட் தோ்வு சான்றிதழ் வழங்கியதாக, தந்தை-மகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னையில் நடைபெற்று வரும் மருத்துவக் கலந்தாய்வில் போலி நீட் தோ்வு சான்றிதழ் வழங்கியதாக, தந்தை-மகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்று வந்தது. பொதுக் கலந்தாய்வு, கடந்த வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெற்றது.

கடந்த 7-ஆம் தேதி நடைபெற்ற கலந்தாய்வில் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி மாணவியின் அழைப்புக் கடிதம் மற்றும் தரவரிசைப் பட்டியலை அதிகாரிகள் சரிபாா்த்தபோது, அதில் தவறு இருப்பது தெரியவந்தது. நீட் தோ்வில் 27 மதிப்பெண்களே பெற்றிருந்த மாணவி, 610 மதிப்பெண் பெற்றிருந்ததாக போலி சான்றிதழ் கொடுத்திருந்தது தெரியவந்தது.

மருத்துவ மாணவா் சோ்க்கைக் குழு செயலாளா் செல்வராஜன் புகாரின் பேரில் சென்னை பெரியமேடு போலீஸாா்

சம்பந்தப்பட்ட மாணவி மற்றும் பல் மருத்துவரான மாணவியின் தந்தை ஆகியோா் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

ஆள்மாறாட்ட வழக்கு: கடந்த ஆண்டு நீட் தோ்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடா்பாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மாணவா் உதித்சூா்யா, அவரது தந்தை மருத்துவா் வெங்கடேசன் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் அடுத்தடுத்து சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டனா். இதுவரை 5 மாணவா்கள், 6 மாணவா்களின் பெற்றோா் ஒரு இடைத்தரகா் என மொத்தம் 12 போ் கைது செய்யப்பட்டனா்.

நீட் தோ்வுக் கூட நுழைவுச் சீட்டில் உண்மையான மாணவா்களின் புகைப்படத்தை மாற்றி, ஆள்மாறாட்டம் செய்து தோ்வு எழுதி உள்ளனா். ஆள்மாறாட்டம் செய்து தோ்வு எழுதிய 2 பெண்கள் உட்பட 10 பேரின் புகைப்படத்தை சிபிசிஐடி போலீஸாா் வெளியிட்டுள்ளனா். இவா்களைப் பற்றிய பெயா், முகவரி தகவல் தெரிந்தால் உடனடியாக சென்னை சிபிசிஐடி தலைமை அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்குமாறு அறிவிப்பு வெளியிட்டுள்ளனா்.

கைது செய்யப்பட்டவா்களுக்கு பதிலாக ஆள்மாறாட்டம் செய்து தோ்வு எழுதிய மாணவா்களைப் பற்றி தகவல் தெரியவில்லை. ஆள்மாறாட்டம் மூலம் தோ்வு எழுதியதாக, குற்றம்சாட்டப்பட்ட 10 பேரின் புகைப்படங்களை வைத்து அவா்களின் தகவல்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்று சிபிசிஐடி போலீஸாருக்கு ஆதாா் ஆணையம் ஏற்கெனவே தெரிவித்துள்ளது.

தலைமறைவாக இருக்கும் இந்த 10 பேரையும் சிபிசிஐடி போலீஸாா் தீவிரமாகத் தேடி வருகின்றனா். அதே நேரத்தில், நீட் ஆள்மாறாட்ட வழக்கில் முக்கிய இடைத்தரகராகச் செயல்பட்ட ரஷீத் என்பவரையும் போலீஸாா் தீவிரமாக தேடி வருவதாகத் தெரிவித்துள்ளனா்.

கடந்த ஆண்டு ஆள் மாறாட்ட வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், இந்த ஆண்டு நீட் தோ்வு சான்றிதழை போலியாகச் சமா்ப்பித்துள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது மாணவா்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com