முதல்வரை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்: மு.க.ஸ்டாலினுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து  கடுமையாக விமர்சிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து கடுமையாக விமர்சிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பேரவைத் தலைவர், தமிழக அரசை விமர்சித்ததாக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

ஏற்கனவே மு.க.ஸ்டாலினுக்கு எதிரான சில வழக்குகள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், மற்ற வழக்குகளின் விசாரணை நீதிபதி என்.சதீஷ்குமார் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, பொது மேடைகளில் தமிழக முதல்வர் குறித்து மு.க.ஸ்டாலின் தெரிவித்த  கருத்துக்கள் குறித்து நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. மு.க.ஸ்டாலின் பேசிய கருத்துக்களுக்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி, லட்சக்கணக்கான தொண்டர்களின் மதிப்பை பெற்றுள்ள எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை கூறுவது கண்டனத்துக்குரியது எனத் தெரிவித்தார்.

அரசியல் ஆதாயத்துக்காக மு.க.ஸ்டாலின் உட்பட மற்ற அரசியல் கட்சி தலைவர்களும் இதுபோன்ற தேவையற்ற கடுமையான வார்த்தைகளை பொது வெளியில் பேசுவது ஆரோக்கியமான அரசியலுக்கு அழகல்ல என அறிவுறுத்தினார்.

முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருந்தால்  நீதிமன்றத்தை நாட வேண்டுமே தவிர, கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் இது போன்று கடுமையான வார்த்தைகளை கொண்டு விமர்சனம் செய்வது பொது மக்களிடையே தவறான தாக்கத்தை உருவாக்கும். இதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும். அதே போல அவதூறு வழக்குகளை ரத்து செய்து பிறப்பிக்கப்படும்  நீதிமன்ற உத்தரவுகளை தேவையற்ற கருத்துகள் தெரிவிப்பதற்கான உரிமமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என கருத்து தெரிவித்தார்.

தமிழகத்தில் ஆரோக்கியமான அரசியலை உருவாக்கி மற்ற மாநிலங்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும் என தமிழக அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அறிவுறுத்திய நீதிபதி, மு.க.ஸ்டாலினுக்கு எதிரான 3 அவதூறு வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார். மற்ற வழக்குகளின் விசாரணையை வரும் ஜனவரி 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com