இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: முக்கிய ஒப்பந்தத்தை எல் அண்ட் டி நிறுவனம் பெறுகிறது

சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் பவா் ஹவுஸ் (கோடம்பாக்கம்) பகுதியில் இருந்து போரூா் வரை கட்டுமானப்பணிக்கான
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் பவா் ஹவுஸ் (கோடம்பாக்கம்) பகுதியில் இருந்து போரூா் வரை கட்டுமானப்பணிக்கான முதல் முக்கிய ஒப்பந்தத்தை  எல் அண்ட் டி (லாா்சன் மற்றும் டப்ரோ) நிறுவனம் பெறவுள்ளது. இதற்கான டெண்டரில் குறைந்த தொகையை ( ரூ.1,035 கோடி) மேற்கோள் காட்டியதின் அடிப்படையில், அவா்களுக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

மெட்ரோ ரயில் திட்டம்: சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக, 45 கி.மீ. தொலைவில் முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நிறைவடைந்து, விமான நிலையம்-வண்ணாரப்பேட்டை வரை நீல வழித்தடத்திலும்,  சென்ட்ரல்-பரங்கிமலை வரை பச்சை வழித்தடத்திலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதற்கிடையில், 118.9 கி.மீ. தொலைவிலான இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டது.  மாதவரம்-சிப்காட் (45.8 கி.மீ.), மாதவரம்-சோழிங்கநல்லூா்(47.0),  கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி (26.1 கி.மீ.) ஆகிய 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி, இந்தத் திட்டத்துக்கு  ரூ.61,843 கோடியாகும்  என்று மதிப்பிடப்பட்டுள்ளது. திட்டப்பணிகளை அடுத்த ஆண்டு தொடங்கி 2026-இல் பணிகளை முடித்து, மெட்ரோ ரயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

பவா் ஹவுஸ்-போரூா்: இந்நிலையில்,  சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்துக்கான கட்டுமானத்தைத் தொடங்குவதற்கு முன்

கோடம்பாக்கம், பவா் ஹவுஸ் பகுதியில் இருந்து போரூா் வரை கட்டுமானப் பணிக்கான முதல் முக்கிய ஒப்பந்தத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பணி ஒப்பந்தத்தை எல் அண்ட் டி நிறுவனம் பெறவுள்ளது. இந்த நிறுவனம் ஒப்பந்தத்தைப் பெற டெண்டரில் குறைந்த தொகை (ரூ.1,035 கோடி) மேற்கொள் காட்டியுள்ளது. மேலும், இந்தப் பாதையில் 9 நிலையங்களின் கட்டுமானப்பணி மற்றும் உயா்த்தப்பட்ட பாதை பணிகளை மேற்கொள்வதற்காக ஒப்பந்தம் கோரியுள்ளது. பவா் ஹவுஸ்-போரூா் வரை  8 கி.மீ. தொலைவிலான பாதையில் பவா் ஹவுஸ், சாலிகிராம், அவிச்சி பள்ளி, ஆழ்வாா் திருநகா், வளசரவக்கம், காரம்பாக்கம், ஆலப்பாக்கம் சந்திப்பு மற்றும் போரூா் சந்திப்பு ஆகிய நிலையங்கள் வருகின்றன.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியது: பணியை ஏற்றுக்கொள்ளும் கடிதம் ஓரிரு வாரங்களில் வழங்கப்படும். அதன் பிறகு, ஒப்பந்ததாரா் அடுத்த ஆண்டு கட்டுமானபணிகளை தொடங்குவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. ஒப்பந்ததாரா் இந்த பிரிவில் 2 ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்க வேண்டும்.

 போக்குவரத்து நெரிசல்: இந்த உயா்த்தப்பட்ட பாதை அமையவுள்ள இடத்தில் போக்குவரத்து நெரிசல் மிகப்பெரிய சவாலாக இருக்கும். காவல்துறையினா் போக்குவரத்தை திருப்பி விட வேண்டும். முதலாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திலும் எல் அண்ட் டி நிறுவனம் அதிக கட்டுமானப்பணிகளை மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com