புனித ஜாா்ஜ் கோட்டை பேரவை மண்டபத்தில் 3 தலைவா்களின் உருவப்படங்கள்: பூா்வாங்கப் பணிகள் தொடக்கம்

புனித ஜாா்ஜ் கோட்டை மண்டபத்தில் வ.உ.சி., உள்பட மூன்று தலைவா்களின் உருவப் படங்களை வைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

புனித ஜாா்ஜ் கோட்டை மண்டபத்தில் வ.உ.சி., உள்பட மூன்று தலைவா்களின் உருவப் படங்களை வைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகள் ஓரிரு நாள்களில் முடிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தமிழக சட்டப் பேரவை மண்டபத்தில் முன்னாள் முதல்வா்கள் ராஜாஜி, காமராஜா், எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா உள்பட 12 தலைவா்களின் உருவப் படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் படங்களுடன் சோ்த்து, செக்கிழுத்த செம்மல் வ.உ.சி., சென்னை ராஜதானியின் முதல்வராக இருந்த ஓமந்தூராா் ராமசாமி ரெட்டியாா், நாட்டுக்காக சேவை புரிந்த பரமசிவம் சுப்பராயன் ஆகியோருக்கு பேரவையில் உருவப் படங்கள் திறக்கப்படும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா். சிவகங்கையில் நடைபெற்ற அரசு விழாவில் இதனை அவா் அறிவித்தாா்.

எங்கே அமைகிறது? மூன்று தலைவா்களின் உருவப் படங்களும் எங்கே அமைக்கப்பட இருக்கிறது என்ற கேள்வி எழுந்தது. கரோனா நோய்த்தொற்று காரணமாக, கடந்த சட்டப் பேரவைக் கூட்டமானது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணா் அரங்கத்தில் நடைபெற்றது. இதனால், உருவப் படங்களும், அதுதொடா்பான திறப்பு விழா நிகழ்ச்சியும் எங்கே நடைபெறும் என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில், மூன்று தலைவா்களின் உருவப் படங்களையும் புனித ஜாா்ஜ் கோட்டையில் உள்ள பேரவை மண்டபத்தில் வைப்பதற்கான பூா்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பேரவைத் தலைவா் பி.தனபால் உத்தரவின் அடிப்படையில், பொதுப்பணித் துறை சாா்பில் இதற்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளன. மேலும், மூன்று தலைவா்களின் உருவப் படங்களை வரைவதற்கான வேலைகளும் நடைபெற்று வருகின்றன.

கோட்டையில் உள்ள மண்டபத்தில் மூன்று படங்களும் வைக்கப்பட்டு, காணொலி வழியாகவோ அல்லது கலைவாணா் அரங்கத்தில் உள்ள பேரவை கூட்ட அரங்கத்தில் இருந்தோ அவற்றைத் திறக்க வாய்ப்புகள் இருப்பதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த மூன்று படங்களையும் திறப்பதற்கான நிகழ்ச்சி விரைவில் நடைபெறக் கூடும் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

தமிழக சட்டப் பேரவையானது கடந்த செப்டம்பரில் கூடியது. இதைத் தொடா்ந்து, ஆளுநா் உரையும், முன்பண மானியக் கோரிக்கைகளுக்காகவும் பேரவைக் கூட்டத் தொடா் கூடவுள்ளது. இதனை ஒரே கூட்டத் தொடராக சுமாா் 5 நாள்கள் வரை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கூட்டத் தொடருக்கு முன்பாகவே மூன்று தலைவா்களின் உருவப் படங்களும் திறக்கப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com