செந்தாரப்பட்டி ஏரி மதகு ஷட்டரை சீரமைக்காததால் பாசனம் பாதிப்பு!

தம்மம்பட்டி அருகே ஏரி மதகின் ஷட்டரை சீரமைக்காததால், பல நூறு ஏக்கர் பாசனம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
செந்தாரப்பட்டி ஏரி மதகு ஷட்டரை சீரமைக்காததால் உடைந்து போயிருக்கும் இரண்டாம் எண் மதகு ஷட்டர்.
செந்தாரப்பட்டி ஏரி மதகு ஷட்டரை சீரமைக்காததால் உடைந்து போயிருக்கும் இரண்டாம் எண் மதகு ஷட்டர்.



தம்மம்பட்டி: தம்மம்பட்டி அருகே ஏரி மதகின் ஷட்டரை சீரமைக்காததால், பல நூறு ஏக்கர் பாசனம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

சேலம் மாவட்டத்தில், இரண்டாவது பெரிய ஏரிகளில், தம்மம்பட்டி அருகே உள்ள செந்தாரப்பட்டி ஏரி குறிப்பிடத்தக்கது. 120 ஏக்கர் பரப்பளவு கொண்ட செந்தாரப்பட்டி ஏரி, 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு, தற்போதுதான் முழு கொள்ளவை எட்டி, மறுகால் வழியாக தண்ணீர் செல்கிறது. இந்த ஏரியில் பாசனத்திற்கு என மூன்று மதகுகள் உள்ளன. 

முதலாம் எண் மதகு வழியாக செல்லும் பாசனம் மூலம் கோனேரிப்பட்டி பகுதியில் 50 ஏக்கரும், இரண்டாம் எண் மதகு வழியாக செல்லும் பாசனம் மூலம் கோனேரிப்பட்டி, கொண்டையம்பள்ளி, செந்தாரப்பட்டி பகுதியில் 400 ஏக்கரும், மூன்றாம் எண் மதகு வழியாக, ஏரியை ஒட்டியுள்ள 100 ஏக்கரும் பாசனம் பெறும். 

தற்போது ஏரியில் தண்ணீர் முழு அளவை எட்டி, இரண்டாம் எண் மதகை தவிர மற்ற மதகுகள் வழியாக பாசனத்திற்கு தண்ணீர் செல்கிறது. அதிக பரப்பளவிற்கு பாசனத் தண்ணீர் வெளியேறும், இரண்டாம் எண் மதகின் ஷட்டர் உடைந்து போயிருப்பதால், மதகின் ஷட்டரை திறக்க முடியவில்லை. அதனால், 400 ஏக்கர் பாசனம் பெறும் வயல்களில், விவசாயம் செய்யமுடியாமல் பாதிக்கப்பட்டுள்ளது என ஆயக்கட்டு விவசாயிகள் கூறுகின்றனர். 

எனவே, ஏரியின் இரண்டாம் எண் மதகு ஷட்டரை, பொதுப்பணித்துறையினர், போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஆயக்கட்டு விவசாயி ராஜேஷ்கண்ணா கூறியதாவது," இரண்டாம் எண் மதகு ஷட்டர் உடைந்துள்ளது. தண்ணீர் வெளியேறும் பகுதியில், சமூக விரோதிகள் பெரிய கற்களை போட்டும், மண்ணை கொட்டியும் மூடியுள்ளனர். இதை பொதுப்பணித்துறையினர், உடனடியாக சீரமைத்து, பாசனத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com