ராமதாஸ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

சாதி வாரியாக, வகுப்பு வாரியான விவரங்களை வழங்கக் கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 
ராமதாஸ்.
ராமதாஸ்.

கடந்த 1989-ஆம் ஆண்டு முதல் இதுவரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களின், சாதி வாரியாக, வகுப்பு வாரியான விவரங்களை வழங்கக் கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

சென்னை உயர்நீதிமன்றத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தாக்கல் செய்த மனுவில், வன்னிய சமுதாயத்தினருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி கடந்த 1987-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட போராட்டங்களுக்கு பின்னர் , கடந்த 1989-ஆம் ஆண்டு, 107 சாதியினரைச் சேர்த்து மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. 

கடந்த 1989 -ஆம் ஆண்டு முதல் இதுவரை  தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரங்களை, ஆண்டுவாரியாக, வகுப்பு வாரியாக, ஜாதி வாரியாக வழங்க வேண்டும். குரூப் 1,2 மற்றும் 4 -ஆவது பிரிவுகளில் உள்ள காலியிடங்கள் குறித்த விவரங்களை வழங்க கோரி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு விண்ணப்பித்தேன். 

அந்த விவரங்கள் தனித்தனியாக தொகுத்து பராமரிக்கப்படவில்லை எனக் கூறி, அரசுப் பணியாளர் தேர்வாணையம் தகவல் வழங்க மறுத்து விட்டது. ஆனால்இந்த விவரங்களை வழங்க எந்த தடையும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைச் சுட்டிக்காட்டி மீண்டும் விண்ணப்பித்துள்ளேன். எனவே எனது விண்ணப்பத்தை பரிசீலித்து, இந்த விவரங்களை வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், இந்த விவரங்களை வெளியிடுவதால் சமூக நல்லிணக்கம் பாதிக்கும் எனக் கூற எந்த அடிப்படையும் இல்லை என உயர் நீதிமன்றம் கடந்த 2010-ஆம் ஆண்டில் பிறப்பித்த உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளதாக  வாதிடப்பட்டது.

இந்த வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதிகள், எந்த சமூகமும் கல்வி பெறுவதற்கு எந்த தடையும் இல்லை. மனுதாரர் நல்ல தரமான பள்ளிகளை துவங்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திடம் இருந்து இந்த விவரங்களை பெற்ற பின் தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெறாது என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது ? என கேள்வி எழுப்பி, தொடண்டர்களை கட்டுப்படுத்தும் பொறுப்பு கட்சி தலைவர்களுக்கு உள்ளது என கருத்து தெரிவித்தனர்.

பின்னர், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனக்கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com