புதிய கரோனா வைரஸ் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம்: ராதாகிருஷ்ணன்

பிரிட்டனில் வேகமாகப் பரவி வரும் மரபியல் மாற்றமடைந்த அதிதீவிர கரோனா வைரஸ் குறித்து மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சுகாதாரத் துறைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன்.
சுகாதாரத் துறைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன்.


சென்னை: பிரிட்டனில் வேகமாகப் பரவி வரும் மரபியல் மாற்றமடைந்த அதிதீவிர கரோனா வைரஸ் குறித்து மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனிலிருந்து சென்னை வந்த நபருக்கு கரோனா கண்டறியப்பட்ட நிலையில், தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் செய்யப்பட்டு வரும் கண்காணிப்புப் பணிகளை இன்று காலை நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது, பிரிட்டனிலிருந்து தில்லி வழியாக சென்னை வந்த நபருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கடந்த 10 நாள்களில் பிரிட்டனில் இருந்து வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 10 நாள்களில் பல்வேறு நாடுகளிலிருந்து பிரிட்டன் வழியாக சென்னை வந்த 1,088 பேர் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசின் கண்காணிப்பு தீவிரமாக இருப்பதால், பிரிட்டனில் பரவி வரும் அதிதீவிர கரோனா வைரஸ் குறித்த மக்கள் யாரும் அச்சம் கொள்ளத்தேவையில்லை. கரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள நாம் ஏற்கனவே பின்பற்றி வரும் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி, கூட்டமான மற்றும் மூடிய அறைகளில் இருப்பதை தவிர்த்தல் போன்றவற்றை மக்கள் தொடர்ந்து பின்பற்றினாலே போதும்.

சென்னை வந்திருக்கும் நபருக்கு பாதித்திருக்கும் கரோனா, வீரியமிக்க கரோனாவா என்பது பரிசோதனைக்குப் பிறகே தெரிய வரும். அவர் இயல்பாகவே இருக்கிறார். வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருந்த அவர் தற்போது கிண்டி கிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், பிரிட்டனிலிருந்து வேறு நாடுகள் வழியாக தமிழகம் வருவோரும் தீவிர கண்காணிப்புக்கு உள்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com