மினி கிளினிக் இடமாற்றத்தைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

தமிழக அரசின் மினி கிளினிக்கை இடமாற்றம் செய்த அதிகாரிகளைக் கண்டித்து, கீழப்புலியூர் கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மினி கிளினிக் இடமாற்றத்தைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்
மினி கிளினிக் இடமாற்றத்தைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

பெரம்பலூர் அருகே தங்களது கிராமத்துக்கு ஒதுக்கிய தமிழக அரசின் மினி கிளினிக்கை இடமாற்றம் செய்த அதிகாரிகளைக் கண்டித்து, கீழப்புலியூர் கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக்குகள் தொடங்கிட முதல்வர் உத்தரவிட்டுள்ள நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் 16 கிராமங்களில் அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கபட உள்ளது. இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியத்திலுள்ள தேனூர் கிராமத்தில் புதிதாக செயல்பட உள்ள மினி கிளினிக்கை  சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆர்.டி. ராமச்சந்திரன், இரா. தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலையில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ப. ஸ்ரீ வெங்கட பிரியா வியாழக்கிழமை திறந்து வைத்தார். 

இதனிடையே, பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரம் அருகே கீழப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கிராமத்துக்கு ஒதுக்கிய மினி கிளினிக்கை வேறு கிராமத்துக்கு இடமாற்றம் செய்த அதிகாரிகளைக் கண்டித்து, பெரம்பலூர் -எழுமூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற மங்களமேடு காவல் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதையடுத்து, குன்னம் வட்டாட்சியர் மற்றும் வேப்பூர் வட்டார சுகாதாரத் துறை அலுவலர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கீழப்புலியூர் கிராமத்தில் அம்மா கிளினிக் தொடங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் மறியலைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com