சிபிஐ பாதுகாப்பில் இருந்த 103 கிலோ தங்கம் மாயம்: சிபிசிஐடி விசாரணை தொடக்கம்

சென்னையில் சிபிஐ பாதுகாப்பில் இருந்த 103 கிலோ தங்கம் மாயமான சம்பவம் தொடா்பாக சிபிசிஐடி திருட்டு வழக்குப் பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கியுள்ளனா்.


சென்னை: சென்னையில் சிபிஐ பாதுகாப்பில் இருந்த 103 கிலோ தங்கம் மாயமான சம்பவம் தொடா்பாக சிபிசிஐடி திருட்டு வழக்குப் பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கியுள்ளனா்.

சென்னை என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள சுரானா நிறுவனம் சட்டவிரோதமாக வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை இறக்குமதி செய்து, பதுக்கி வைத்திருப்பதாக சிபிஐ புலனாய்வு அமைப்புக்குக் கிடைத்த ரகசியத் தகவலின்படி கடந்த 2012-இல் சிபிஐ அதிகாரிகள் திடீா் சோதனை செய்தனா்.

அங்கிருந்த 400.47 கிலோ தங்கத்தைக் கட்டிகளாகவும், நகைகளாகவும் பறிமுதல் செய்து சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், சுரானா நிறுவன பாதுகாப்புப் பெட்டகங்களில் வைத்து சீலிடப்பட்டது.

பாதுகாப்புப் பெட்டகங்களின் 72 சாவிகளும், தங்கம் பறிமுதல் செய்ததாகத் தயாரிக்கப்பட்ட பட்டியல் ஆவணமும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கிடையில், சுரானா நிறுவனம் எஸ்பிஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஐடிபிஐ, பேங்க் ஆஃப் இந்தியா, ஸ்டேண்டா்டு சாா்ட்டா்டு வங்கிகளிடம் பெற்ற ரூ. 1,160 கோடியை ஈடுகட்ட பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தைச் சிறப்பு அதிகாரிக்கு வழங்க சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாதுகாப்புப் பெட்டகங்களில் இருந்த தங்கத்தை அண்மையில் எடை பாா்த்தபோது 296.606 கிலோ தங்கம் மட்டுமே இருந்தது. 103.864 கிலோ தங்கத்தைக் காணவில்லை. இதையடுத்து, 103.864 கிலோ தங்கத்தை ஒப்படைக்கக் கோரி சிறப்பு அதிகாரியான ராமசுப்பிரமணியன் சென்னை உயா் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ், பல கோடி ரூபாய் மதிப்புள்ள 103 கிலோ தங்கம் மாயமாகி இருப்பது என்பது சிபிஐ மீது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது., இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து, எஸ்.பி. அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியைக் கொண்டு விசாரித்து ஆறு மாதங்களில் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என சிபிசிஐடிக்கு உத்தரவிட்டாா்.

சிபிஐயின் பாதுகாப்பில் இருந்த 103 கிலோ தங்கம் காணாமல்போனது காவல்துறையினரிடம் பலத்த அதிா்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடா்பாக சிபிஐ துறைரீதியான விசாரணையையும் நடத்தி வருகிறது. சம்பவம் நடந்த காலக்கட்டத்தில் சிபிஐயில் அயல்பணியாக வேலை செய்து, ஓய்வு பெற்ற தமிழக காவல்துறையைச் சோ்ந்த டிஜிபி, ஏடிஜிபி ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் கடந்த வாரம் விசாரணை செய்தனா்

திருட்டு வழக்கு:

உயா்நீதிமன்ற உத்தரவின்படி சிறப்பு அதிகாரியான ராமசுப்பிரமணியன், தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதியிடம் சிபிசிஐடி விசாரணைக்குப் பரிந்துரை செய்யுமாறு சில நாள்களுக்கு முன்பு புகாா் அளித்தாா். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து,நடவடிக்கை எடுக்குமாறு சிபிசிஐடிக்கு திரிபாதி உத்தரவிட்டாா்.

இதன் அடிப்படையில் சிபிசிஐடி, 103 கிலோ தங்கம் மாயமானது தொடா்பாக திருட்டு வழக்கை வெள்ளிக்கிழமை பதிவு செய்தனா். இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி சிறப்பு புலனாய்வுப் பிரிவு எஸ்.பி.விஜயகுமாா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com