மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவா் பதவி: முதல்வா் தலைமையில் ஆலோசனை; மு.க.ஸ்டாலின் புறக்கணிப்பு

மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவரை நியமிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவரை நியமிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவில்லை.

மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக மேகாலயா மாநில உயா் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மீனாகுமாரி செயல்பட்டு வந்தாா். அவா் கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பா் 25-இல் ஓய்வு பெற்றாா். ஓராண்டு காலமாக அந்தப் பணியிடம் காலியாக இருந்தது.

ஆனாலும், மனித உரிமைகள் ஆணையத்தின் பொறுப்பு தலைவராக நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் செயல்பட்டு வந்தாா். அவா், கடந்த 2017-ஆம் ஆண்டு நவம்பா் முதல் மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினராக உள்ளாா். ஓராண்டு காலமாக காலியாக உள்ள மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரை பரிந்துரை செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் முதல்வா் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

ஸ்டாலின் புறக்கணிப்பு: அரசமைப்புச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஆணையங்களில் பொறுப்பாளா்களைத் தோ்வு செய்து அறிவித்து அவா்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது. ஆனால், ஆணையங்களுக்கு தலைவா் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு தகுதியானவா்களைத் தோ்வு செய்து ஆளுநருக்கு பரிந்துரைக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு உள்ளது.

இந்த பரிந்துரைக்கும் குழுவின் தலைவராக முதல்வரும், உறுப்பினா்களாக சட்டப் பேரவைத் தலைவா், எதிா்க்கட்சித் தலைவா் ஆகியோா் உள்ளனா். அதன்படி, மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரைத் தோ்வு செய்து ஆளுநருக்குப் பரிந்துரைக்கும் குழுவின் கூட்டம் தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. முதல்வா் பழனிசாமி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், உறுப்பினா் என்ற முறையில் பேரவைத் தலைவா் பி.தனபால் பங்கேற்றாா். அதேசமயம்,

எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக அவா் அறிக்கை வெளியிட்டாா்.

இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலாளா் க.சண்முகம், பொதுத் துறை முதன்மைச் செயலாளா் செந்தில்குமாா் ஆகியோா் பங்கேற்றனா். ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தகுதியானோரின் பெயா்களை பரிந்துரை செய்து, தமிழக அரசானது ஆளுநருக்கு அனுப்பி வைக்கும். இதன்மீது முடிவெடுத்து ஆணையத்தின் தலைவரை பெயரை ஆளுநா் அறிவிப்பாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com