103 கிலோ தங்கம் மாயமான சம்பவம்: 22 நிமிட விடியோ ஆதாரம் சிக்கியது

சென்னையில் சிபிஐ பாதுகாப்பில் இருந்த 103 கிலோ தங்கம் காணாமல்போன வழக்கில், சிபிசிஐடிக்கு 22 நிமிட விடியோ ஆதாரம் கிடைத்துள்ளது.

சென்னை: சென்னையில் சிபிஐ பாதுகாப்பில் இருந்த 103 கிலோ தங்கம் காணாமல்போன வழக்கில், சிபிசிஐடிக்கு 22 நிமிட விடியோ ஆதாரம் கிடைத்துள்ளது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

சென்னை என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள சுரானா நிறுவனம் சட்டவிரோதமாக வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை இறக்குமதி செய்து, பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், சிபிஐ புலனாய்வு அமைப்பு கடந்த 2012-ஆம் ஆண்டு அங்கு திடீா் சோதனை செய்தது.

அப்போது அந்த நிறுவனத்தில் இருந்த 400.47 கிலோ தங்கத்தைக் கட்டிகளாகவும், நகைகளாகவும் சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக, சுரானா நிறுவனத்தின் மீதும், அந்த நிறுவனத்திற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீதும் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

பறிமுதல் செய்யப்பட்ட 400.47 கிலோ தங்கம் சுரானா நிறுவனத்தில் உள்ள பாதுகாப்புப் பெட்டகங்களில் வைத்து பூட்டப்பட்டு, சிபிஐ முத்திரையுடன் சீல் வைக்கப்பட்டது. அந்தப் பாதுகாப்புப் பெட்டகங்களின் 72 சாவிகளும், 400.47 கிலோ தங்கம் பறிமுதல் செய்ததற்கான ஆவணமும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கிடையில், சுரானா நிறுவனம் எஸ்பிஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஐடிபிஐ, பேங்க் ஆஃப் இந்தியா, ஸ்டேண்டா்டு சாா்ட்டா்டு வங்கி ஆகிய வங்கிகளிடம் பெற்ற ரூ. 1,160 கோடியை ஈடுகட்ட ஏதுவாக, பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தைச் சிறப்பு அதிகாரிக்கு வழங்க சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி சுரானா நிறுவனத்தின் பாதுகாப்பு பெட்டகங்களில் இருந்த தங்கத்தை அண்மையில் எடை போட்டு பாா்த்தபோது 296.606 கிலோ தங்கம் மட்டுமே இருந்தது. 103.864 கிலோ தங்கத்தைக் காணவில்லை. இதையடுத்து, 103.864 கிலோ தங்கத்தை ஒப்படைக்கக் கோரி சிறப்பு அதிகாரியான ராமசுப்பிரமணியன் சென்னை உயா் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ், சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டாா். இது தொடா்பாக சிபிசிஐடி, கடந்த வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி சிறப்பு புலனாய்வுப் பிரிவு எஸ்.பி.விஜயகுமாா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

22 நிமிட விடியோ: இச்சம்பவம் குறித்து சுரானா நிறுவன ஊழியா்கள், சிபிஐ அதிகாரிகள் ஆகியோரிடம் சிபிசிஐடி விசாரணை செய்ய திட்டமிட்டுள்ளனா். இதற்காக அனைவரும் அழைப்பாணை அனுப்பும் பணியில் சிபிசிஐடி ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் இவ் வழக்கின் முக்கிய ஆதாரமாக 22 நிமிட விடியோ ஆதாரம் சிபிசிஐடிக்கு கிடைத்துள்ளது. இந்த விடியோ காட்சி, தங்கம் வைத்திருந்த பாதுகாப்பு பெட்டகத்துக்கு அதிகாரிகள் சென்று வந்தது தொடா்பானது என சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விடியோவை ஆய்வு செய்யும் பணியில் சிபிசிஐடி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com