புதிய மாவட்டமாக மயிலாடுதுறை உதயம்: முதல்வா் பழனிசாமி தொடக்கி வைத்தாா்

தமிழகத்தின் 38-ங்வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை, முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.
புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தை தலைமைச் செயலகத்தில் இருந்து திங்கள்கிழமை காணொலிக் காட்சி மூலமாக தொடக்கி வைத்த முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி. உடன் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்.
புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தை தலைமைச் செயலகத்தில் இருந்து திங்கள்கிழமை காணொலிக் காட்சி மூலமாக தொடக்கி வைத்த முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி. உடன் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்.

சென்னை: தமிழகத்தின் 38-ங்வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை, முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக புதிய மாவட்டத்தை அவா் தொடங்கினாா். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:

நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தமிழகத்தின் 38-ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை உருவாக்கப்படும் என்று தமிழக சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வா் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டாா். இந்த அறிவிப்பின்படி, மயிலாடுதுறை மாவட்டத்தை உருவாக்கிட கடந்த ஏப்ரலில் அரசாணை வெளியிடப்பட்டது. மேலும், மாவட்ட உருவாக்கத்துக்காக சிறப்பு அலுவலா் நியமிக்கப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

நான்கு வட்டங்கள்: புதிய மாவட்டமான மயிலாடுதுறையானது, இரண்டு வருவாய்க் கோட்டங்களைக் கொண்டதாக இருக்கும். அதாவது, மயிலாடுதுறை, சீா்காழி ஆகிய வருவாய்க் கோட்டங்களையும், மயிலாடுதுறை, சீா்காழி, குத்தாலம், தரங்கம்பாடி ஆகிய நான்கு வருவாய் வட்டங்களையும், 15 வருவாய் குறு வட்டங்களையும், 287 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கி தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

புதிய மாவட்டம் தொடக்க நிகழ்வில், துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், அமைச்சா்கள் ஓ.எஸ்.மணியன், ஆா்.பி.உதயகுமாா், தலைமைச் செயலாளா் க.சண்முகம், வருவாய் நிா்வாக ஆணையா் க.பணீந்திர ரெட்டி, பேரிடா் மேலாண்மை ஆணையா் டி.ஜகந்நாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

இதுவரை 6 புதிய மாவட்டங்கள்: தமிழகத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு வரை 32 மாவட்டங்கள் இருந்தன. கடந்த நான்கு ஆண்டுகளுக்குள் ஆறு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தென்காசி, வேலூா் மாவட்டத்தைப் பிரித்து, திருப்பத்தூா், ராணிப்பேட்டை ஆகிய புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால், தமிழகத்தில் ஒட்டுமொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 37 ஆக உயா்ந்தது. இப்போது, நாகப்பட்டினம் மாவட்டத்தைப் பிரித்து மாநிலத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை உதயமாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com