போராட்டங்களுக்குப் பிறகு நடைபெற்ற நடராஜர் கோயில் தேரோட்டம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பொதுதீட்சிதர்கள் மற்றும் சிவபக்தர்களின் நடைபெற்ற போராட்டத்திற்குப் பின்பு நிபந்தனையின்றி தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
போராட்டங்களுக்குப் பிறகு நடைபெற்ற நடராஜர் கோயில் தேரோட்டம்
போராட்டங்களுக்குப் பிறகு நடைபெற்ற நடராஜர் கோயில் தேரோட்டம்

சிதம்பரம் நடராஜர் கோயில் மார்கழி ஆருத்ரா தரிசன திருவிழாவில் பங்கேற்க இ.பாஸ் பெற வேண்டும் என்ற மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவால் பொதுதீட்சிதர்கள் மற்றும் சிவபக்தர்களின் நடைபெற்ற போராட்டத்திற்குப் பின்பு நிபந்தனையின்றி தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சிதம்பரம் நடராஜர் கோயில் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் கடந்த டிச.21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. டிச.29-ம் தேதி செவ்வாய்க்கிழமை தேரோட்டமும், டிச.30-ம் தேதி மார்கழி ஆருத்ரா தரிசனமும் நடைபெறுவதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் கடலூர் மாவட்ட நிர்வாகம் வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதனை எதிர்த்து பக்தர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழங்கு தொடுத்தார். இவ்வழக்கை அவசர வழக்காக எடுத்து நீதிபதிகள் நடராஜர் கோயில் திருவிழாவில் வெளியூர் பக்தர்கள் பங்கேற்கலாம் என்றும், கரோனா சான்று தேவையில்லை என  ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டனர்.

இந்நிலையில் கடலூர் மாவட்ட நிர்வாகம் சிதம்பரம் நகரில் பக்தர்கள் உள்ளே வர முடியாமல் பல்வேறு தடுப்புகளை அமைத்தது. மேலும் இ.பாஸ் அனுமதி பெற்ற பக்தர்களை மட்டும் தேரோட்டம் மற்றும் ஆருத்ரா தரிசனத்தில் பங்கேற்கலாம் என அறிவித்தது. இதனால் அதிருப்தி அடைந்த பக்தர்கள் மற்றும் பொது தீட்சிதர்கள் இ.பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும். உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கோயில் கிழக்கு கோபுர வாயில் முன்பு கீழரதவீதியில் திங்கள்கிழமை மாலை 6 மணி முதல் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் நள்ளிரவில் கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர், உதவி ஆட்சியர் எல்.மதுபாலன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஶ்ரீஅபிநவ், டிஎஸ்பி த.ஆய.ஜோ.லாமேக் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு ஏற்படவில்லை.

இந்நிலையில், கோயில் பொதுதீட்சிதர்கள் தங்களது கூட்டத்தைக் கூட்டி இ.பாஸ் முறையை ரத்து செய்யாததால், தேரோட்டத்தை ரத்து செய்துவிட்டு, மகாபிஷேகம் மற்றும் ஆருத்ரா தரிசன உற்சவத்தைக் கோயிலுக்குள்ளேயே நடத்துவது என்றும், கோயிலுக்குள் நடைபெற்ற விழாவில் பொதுமக்கள், பக்தர்கள் பங்கேற்க எந்த ஆட்சேபனையும் இல்லை. அனைவரும் பங்கேற்கலாம் என முடிவு செய்து செவ்வாய்க்கிழமை அதிகாலை அறிவித்தனர். 

இதனையடுத்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் தேரோட்டத்திற்கு இ.பாஸ் நடைமுறை கிடையாது என்றும், நிபந்தனையின்றி கரோனா விதிமுறைகளைப் பின்பற்றித் தேரோட்டத்தை நடத்தவும் உத்தரவிட்டதை அடுத்து தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com