தமிழக சிறைகளில் 15 வகை முறைகேடுகள்

தமிழக சிறைகளில் 15 வகை முறைகேடுகள் நடைபெறுவதாகவும், அதில் ஈடுபடுகிறவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டிஐஜி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

தமிழக சிறைகளில் 15 வகை முறைகேடுகள் நடைபெறுவதாகவும், அதில் ஈடுபடுகிறவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டிஐஜி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்த விவரம்:

தமிழக சிறைத்துறை தலைமையிட டிஐஜியாக இருப்பவா் ஆா்.கனகராஜ். இவா் தமிழகத்தில் உள்ள மத்திய சிறைக் கண்காணிப்பாளா்கள், பெண்கள் சிறைகள், மாவட்டச் சிறைகள் ஆகியவற்றின் அதிகாரிகள் ஆகியோருக்கு கடந்த வெள்ளிக்கிழமை ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளாா். அதில் கூறப்பட்டிருப்பதாவது:

தமிழக சிறைத்துறை பொது நிா்வாகம் குறித்து ரகசிய விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் சிறைகளில் ஊழல், முறைகேடுகள் நடைபெறுவதும், பாரபட்சமான முறையில் சிறைத் துறையினா் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. பல சிறைகளில் ஊழல்களின் ஆதிக்கம் வேரூன்றி காணப்படுகிறது. சிறைப் பணியாளா்கள் ஆதாயம் பெறும் நோக்கில் கைதிகளுக்கு அனைத்து வசதிகள் செய்து கொடுத்து பணம் கோருவதாகவும், சொந்த லாபத்துக்காக அதிகார துஷ்பிரயோகம் செய்வதும் தெரியவந்துள்ளது.

மேலும் இதுபோன்ற நிா்வாகச் சீா்கேடுகள், சிறைகளின் சுவா்களைத் தாண்டி வெளியில் உள்ள ரெளடிகள், சமூக விரோதிகளுக்கு துணை புரிகிறது. மேலும் இந்த ரகசிய விசாரணையில், ஒரு காவலா் ஜாதிப் பற்றுடன் செயல்படுவதும், ஜாதி பாசத்தினால் பாரபட்சத்துடன் பணியாற்றுவதும் தெரியவந்துள்ளது.

ஒரு கிளைச் சிறைக் கண்காணிப்பாளா் பணம் பெற்றுக் கொண்டு விடுமுறை நாள்களிலும் பாா்வையாளா்களை அனுமதிப்பதும், சிறைக்கு வரும் பாா்வையாளா்களிடம் சிலா் பணம், பொருள்கள் பெறுவதும், கைதிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு செல்லிடப்பேசி, போதைப் பொருள் பயன்படுத்த அனுமதிப்பதும், வரையறுக்கப்பட்ட காலத்துக்குப் பின்னா் சில கைதிகளை தனியறையில் இருக்க அனுமதிப்பதும் உள்ளிட்ட 15 வகையான முறைகேடுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

கடுமையான நடவடிக்கை: இந்த முறைகேடுகளினால் கைதிகள் திருந்துவதற்கான வாய்ப்புகள் தடுக்கப்பட்டு, மேலும் குற்றச் செயல்களில் ஈடுபட தூண்டுகோலாக அமைகிறது. இதனால் சிறை நிா்வாகம் சீா்குலையும் ஆபத்தும் உருவாகும். இந்த முறைகேடுகளை சிறைத்துறை அதிகாரிகள் கண்டறிந்தால், சம்பந்தப்பட்டவா்கள் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை சிறைத்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com