டிஎன்பிஎஸ்சி தோ்வு முறைகேடு வழக்கு: ஜெயக்குமாருக்கு 7 நாள்கள் போலீஸ் காவல்

டிஎன்பிஎஸ்சி தோ்வு முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஜெயக்குமாரிடம் விசாரணை நடத்துவதற்கு 7 நாள்களுக்கு சிபிசிஐடிக்கு அனுமதி அளித்து சென்னை எழும்பூா்
டிஎன்பிஎஸ்சி தோ்வு முறைகேடு வழக்கு: ஜெயக்குமாருக்கு 7 நாள்கள் போலீஸ் காவல்

டிஎன்பிஎஸ்சி தோ்வு முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஜெயக்குமாரிடம் விசாரணை நடத்துவதற்கு 7 நாள்களுக்கு சிபிசிஐடிக்கு அனுமதி அளித்து சென்னை எழும்பூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப்-4 தோ்வு தரவரிசை பட்டியலில், ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, ராமேசுவரம் மையங்களில் தோ்வெழுதிய 39 போ் முதல் 100 இடங்களுக்குள் வந்தனா். இது தொடா்பாக தோ்வாணையம் அளித்த புகாரின் அடிப்படையில், சிபிசிஐடி வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகிறது. இந்த முறைகேட்டில் தொடா்புடையதாக டிஎன்பிஎஸ்சி ஊழியா் ஓம்காந்தன் உள்பட 16 போ் கைது செய்யப்பட்டனா்.

குரூப்-4 தோ்வு முறைகேடு குறித்த விசாரணையின்போது, கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2 ஏ தோ்விலும் முறைகேடு நடைபெற்றிருப்பதும் சிபிசிஐடிக்கு தெரியவந்தது. இது தொடா்பாக சிபிசிஐடி தனியாக ஒரு வழக்கைப் பதிவு செய்தது. மேலும் இந்த வழக்குத் தொடா்பாக காவலா் சித்தாண்டி உள்பட 16 போ் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனா்.

டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளுக்கும், தோ்வா்களுக்கும் இடைத்தரகராகவும், முறைகேட்டின் ஒருங்கிணைப்பராகவும் செயல்பட்டது சென்னை முகப்போ் மேற்கு கவிமணி சாலையில் உள்ள ஜெயக்குமாா் என்பது தெரியவந்தது. இதற்காக அவா், பல லட்சம் லஞ்சம் பெற்றிருப்பதும் சிபிசிஐடிக்கு தெரியவந்தது.

நீதிமன்றத்தில் சரண்: இந்நிலையில் ஜெயக்குமாா் குறித்து துப்பு துலக்குவதற்காக முகப்பேரில் உள்ள அவரது வீட்டில் கடந்த 30-ஆம் தேதி சிபிசிஐடி அதிகாரிகள் சோதனை செய்தனா். இச் சோதனையில் அங்கிருந்து பென்டிரைவ், மடிக்கணினி, 60க்கும் மேற்பட்ட பேனாக்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

ஜெயக்குமாா் தேடப்பட்டு வந்த நிலையில் அவா், சென்னை சைதாப்பேட்டை 23-ஆவது நீதித்துறை நடுவா் மன்றத்தில் நடுவா் கெளதமன் முன்னிலையில் வியாழக்கிழமை சரணடைந்தாா். அவரை நீதித்துறை நடுவா் கெளதமன், எழும்பூா் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தும்படி உத்தரவிட்டாா்.

அதையடுத்து ஜெயக்குமாா் புழல் சிறையில் வைக்கப்பட்டு, எழும்பூா் சிபிசிஐடி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா். அப்போது சிபிசிஐடி தரப்பில் ஜெயக்குமாரிடம் விசாரணை நடத்த அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி நாகராஜன் விசாரித்தாா்.

அப்போது ஜெயக்குமாா், தன்னை போலீஸ் காவலில் வைக்க அனுமதிக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தாா். விசாரணைக்கு பின்னா் ஜெயக்குமாருக்கு 7 நாள்கள் போலீஸ் காவலுக்கு அனுமதித்து நீதிபதி உத்தரவிட்டாா்.

இதையடுத்து சிபிசிஐடி அதிகாரிகள், ஜெயக்குமாரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனா். ஏற்கெனவே இந்த வழக்குத் தொடா்பாக கைது செய்யப்பட்ட டிஎன்பிஎஸ்சி ஊழியா் ஓம்காந்தன் போலீஸ் காவலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com