இதைவிட தமிழக மக்களை ஏமாற்றுகிற வேலை வேறு எதுவும் இருக்க முடியாது: அழகிரி சீற்றம்

பா.ஜ.க. அரசின் முடிவுகளுக்கு எதிராக கடிதம் எழுதுவதோடு தமது கடமை முடிந்து விட்டதாக முதல்வர் கருதுவதை விட தமிழக மக்களை ஏமாற்றுகிற வேலை வேறு எதுவும் இருக்க முடியாது ....
கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

சென்னை: பா.ஜ.க. அரசின் முடிவுகளுக்கு எதிராக கடிதம் எழுதுவதோடு தமது கடமை முடிந்து விட்டதாக முதல்வர் கருதுவதை விட தமிழக மக்களை ஏமாற்றுகிற வேலை வேறு எதுவும் இருக்க முடியாது என்று மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திங்களன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களால் விவசாயம் பாதிக்கப்பட்டுவதை தடுக்க காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்று தமிழக முதலமைச்சர் அறிவித்திருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வரவேற்கிறேன். ஏற்கனவே, காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களை செயல்படுத்துவதற்கு ஓ.என்;.ஜி.சி. மற்றும் வேதாந்தா போன்ற தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மத்திய பா.ஜ.க. அரசு அனுமதி அளித்திருக்கிறது. கடந்த ஜனவரி 16, 2020 அன்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிற வகையில் மத்திய பா.ஜ.க. அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன் தமிழக அரசையோ, அதில் சம்மந்தப்பட்டவர்களின் கருத்தையோ கேட்காமல் இந்த அறிவிப்பு வெளிவந்திருக்கிறது. இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது. தமிழக மக்களின் உரிமைகளை பறிக்கிற செயலாகும்.

மத்திய அரசின் அறிவிப்பின்படி, சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு செய்வது குறித்து அறிவிக்கையில் திருத்தம் கொண்டு வந்து மத்திய அரசு தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்துகிற திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த முன்அனுமதியோ, பொதுமக்கள் கலந்தாய்வோ தேவையில்லை என்று அதில் கூறப்பட்டிருந்தது. அதை எதிர்த்து தமிழக முதலமைச்சர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். இதுபோன்ற தமிழகத்தை பாதிக்கின்ற மத்திய பா.ஜ.க. அரசின் முடிவுகளுக்கு எதிராக கடிதம் எழுதுவதோடு தமது கடமை முடிந்து விட்டதாக முதலமைச்சர் எடப்பாடி கருதுகிறார். இதைவிட தமிழக மக்களை ஏமாற்றுகிற வேலை வேறு எதுவும் இருக்க முடியாது.

தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இத்தகைய அறிவிப்பை  வெளியிடுகிற துணிவை எப்படிப் பெற்றது ? மத்திய பா.ஜ.க. அரசோடு அனைத்து நிலைகளிலும் நெருக்கமான உறவை வைத்திருக்கிற அ.தி.மு.க. அரசு, இத்தகைய உதாசீனங்களுக்கு உட்படுவதற்கு என்ன காரணம் ? இதன்மூலம் தமிழக உரிமைகள் தாரை வார்க்கப்படுவதற்கு அ.தி.மு.க. அரசு தான் பொறுப்பாகும். இத்தகைய தமிழக விரோதப் போக்கு காரணமாக மக்களிடையே எழுந்துள்ள கடும் சீற்றத்தை திசை திருப்புவதற்காகத் தான் காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்கிற அறிவிப்பை வெளியிட வேண்டிய நிர்ப்பந்தம் தமிழக முதலமைச்சருக்கு ஏற்பட்டிருக்கிறது. உண்மையிலேயே முதலமைச்சருக்கு இந்த அறிவிப்பில் ஈடுபாடு இருக்குமேயானால், இதுகுறித்து தமிழக சட்டமன்றத்தில் இப்பிரச்சினை குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பியிருக்க வேண்டும். ஆனால், இப்பிரச்சினை வரும் போதெல்லாம் தமிழக அரசு அனுமதியின்றி ஹைட்ரோ கார்பன் திட்டம் அமல்படுத்தப்பட மாட்டாது என்று பதில் கூறி தட்டிக்கழித்து வந்தது. ஆனால், மத்திய பா.ஜ.க. அரசு, தமிழக அரசுக்கு தெரியாமலேயே அறிவிக்கை வெளியிட்டது.

காவிரி டெல்டாவைப் பொறுத்தவரை விவசாயத்தை மட்டுமே சார்ந்திருக்க முடியாது. விவசாயத்தோடு சம்மந்தப்பட்ட தொழில்களை ஊக்கப்படுத்தி, காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள 25 லட்சம் விவசாயத் தொழிலாளர்களை காப்பாற்றுவதற்கு தமிழக அரசு என்ன திட்டம் வைத்திருக்கிறது ?

எனவே,காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த அதேநேரத்தில், ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பொறியியல் பட்டதாரிகள் படித்து விட்டு, வேலை வாய்ப்புக் கோரி நிற்கிறார்கள். அத்தகைய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்கு தமிழக அரசு எத்தகைய தொழிற் கொள்கையை கொண்டிருக்கிறது என்பதை உடனடியாக அறிவிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள தொழில் முனைவோர், வல்லுநர்கள் ஆகியோரை அழைத்து ஆரோக்கியமான தொழில் வளர்ச்சிக்கான சூழலை உருவாக்குகிற வகையில் தமிழக தொழிற்கொள்கையை அறிவிக்க உடனடி நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com