ஊராட்சிகளில் வரவு செலவுகளை முறைப்படுத்துவதில் தாமதம்

தமிழகம் முழுவதும் ஊராட்சிகளில் பொது நிதி மேலாண்மை அமைப்பு மூலம் ஊராட்சி வரவு செலவுகளை முறைப்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டு வருவதால் ஏற்படும் இன்னல்களைத் தவிர்க்க
ஊராட்சிகளில் வரவு செலவுகளை முறைப்படுத்துவதில் தாமதம்

விராலிமலை: தமிழகம் முழுவதும் ஊராட்சிகளில் பொது நிதி மேலாண்மை அமைப்பு மூலம் ஊராட்சி வரவு செலவுகளை முறைப்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டு வருவதால் ஏற்படும் இன்னல்களைத் தவிர்க்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 தமிழக ஊரகத் உள்ளாட்சி தேர்தல் நடந்து, மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பேற்று சுமார் ஒரு மாதம் கடந்த நிலையில், தமிழகம் முழுவதும் பொது நிதி மேலாண்மை அமைப்பு மூலம் ஊராட்சி வரவு செலவுகளை முறைப்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.
 இதனால் ஊரகப் பகுதிகளில் சுகாதாரப் பணியாளர்கள், கழிவுநீர் ஓடைகளை பராமரிக்கும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாமல் ஊராட்சி நிர்வாகம் திணறி வருவதாகவும், இதனால் ஊழியர்கள் பணி மற்றும் வருகைப் பதிவில் சுணக்கம் காட்டி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 இதனால் , ஆங்காங்கே குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேட்டோடு நோய் தொற்றும் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் வாழ்வதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
 தமிழகம் முழுவதும் உள்ள 385 ஊராட்சி ஒன்றியங்களில் 12,524 கிராம ஊராட்சிகள் உள்ளன. கிராம ஊராட்சிகளைப் பொருத்தவரை, மொத்தம் 31 நிதி சார்ந்த பதிவேடுகள் பராமரிக்கப்படுகின்றன. இதில் கிராம ஊராட்சிகளுக்கான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள ஊராட்சிப் பொது நிதி மற்றும் மத்திய, மாநில அரசு வழங்கும், நிபந்தனைக்குட்பட்ட மானியக் கணக்கு நிதி, மாநில நிதிக் குழு மானிய நிதி, மாவட்ட திட்ட நிதி உள்ளிட்ட பல்வேறு நிதி ஒதுக்கீடுகளின் கீழ் ஊராட்சிகளின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன.
 இதில் ஊராட்சி பொது நிதிக் கணக்கில் பொதுமக்கள் நேரடியாகச் செலுத்தும் சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் வரி, வணிக நிறுவனங்களின் உரிமக் கட்டணம், ஆசிரியர், அரசு ஊழியர்கள், தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் செலுத்தும் தொழில் வரி ஆகியவற்றின் கீழ் கிடைக்கும் வருவாய், பொது நிதிக் கணக்கில் சேர்க்கப்படுகிறது.
 மத்திய, மாநில அரசுகள் இணைந்து வழங்கும் மாநில நிதிக்குழு மானிய நிதி ஒவ்வொரு ஊராட்சி மன்ற மக்கள்தொகைக்கு ஏற்ப ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 3 லட்சம் வரை ஒவ்வொரு மாதமும் ஒதுக்கப்படுகிறது. இதன் மூலம் அடிப்படை தேவைகள் மற்றும் உள்கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுதவிர மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒதுக்கப்படும் நிதியின் மூலம் இந்திரா நினைவுக் குடியிருப்பு, பசுமை வீடு திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
 இத்திட்டச் செலவினங்களுக்கான பதிவேடுகள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட வேண்டும். கடந்த 2017 ஏப்ரல் மாதம் புதிய பதிவேடு தொடங்கியிருக்க வேண்டும். இந்நிலையில் கடந்த 2016 அக். 26ஆம் தேதி உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிந்த நிலையில், அடுத்த 6 மாதங்களுக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பொறுப்பேற்றிருக்க வேண்டும்.
 ஆனால், வார்டு வரைமுறை காலதாமதம், உள் ஒதுக்கீட்டில் குளறுபடி என்று கூறி எதிர்க்கட்சிகள் நீதிமன்றத்தை நாடியது உள்ளிட்ட சில காரணங்களால் உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போனது. இதனால், உள்ளாட்சியை நிர்வகிக்கும் பொறுப்பு தனி அலுவலர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டு, தேர்தல் அறிவிப்புக்கு முன்பு வரை நிர்வகிக்கப்பட்டது.
 கடந்த காலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பொறுப்பில் இருந்த நிலையில், ஊராட்சித் தலைவர், துணைத் தலைவருக்கு காசோலையைப் பயன்படுத்த அனுமதி இருந்தது. இதன் மூலம், ஊராட்சி பகுதி மக்களின் தேவையறிந்து உடனடியாக அனைத்து அடிப்படைப் பணிகளும் உடனுக்குடன் மேற்கொள்ளப்பட்டன.
 தற்போது தேர்தல் முடிந்து ஊராட்சித் தலைவர்கள் பொறுப்பேற்ற நிலையில், ஊராட்சிகளை நிர்வாகிக்கும் பொறுப்பில் அதிகாரப் பகிர்வு வேண்டும் என்றும் இதனால் பல்வேறு முறைகேடுகளைத் தடுக்க முடியும் என்ற தமிழக அரசின் முடிவால் நிதிப் பரிவர்த்தனைகளை, பொது நிதி மேலாண்மை அமைப்பின் வழியே மட்டுமே செயல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
 ஊராட்சி நிதி நிர்வாகம் பிஎப்எம்எஸ் (பொது நிதி மேலாண்மை அமைப்பு) திட்டத்தின் கீழ் வந்துள்ளதால் காசோலைகள் பயன்பாடு அவசியமற்றதாகி விட்டது என்றும் எக்காரணத்தைக் கொண்டும் ஊராட்சிக் கணக்குகளின் கீழ் காசோலைகளைப் பயன்படுத்தக் கூடாது என்றும் விதிவிலக்காக ஊராட்சி மின் கட்டணம் மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்த மட்டும் காசோலைகள் அனுமதிக்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.
 அதோடு புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கு பிஎப்எம்எஸ் எனப்படும் அமைப்பின் வழியே எவ்வாறு நிதிப் பரிவர்த்தனையை கையாள்வது என்பதைக் கற்று கொடுக்கும்படி அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு (பிடிஓ)உத்தரவிடப்பட்டுள்ளது அரசு.
 இதனால் ஆன்லைன் மூலம் பணப் பரிவர்த்தனைகளை எவ்வாறு கணினியில் மேற்கொள்வது என்பதை ஊராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர் முழுமையாக அறிந்த பின்னர்தான், மக்களின் அடிப்படைத் தேவை மற்றும் உள்ளாட்சி ஊழியர்களுக்கு மாத ஊதியம் வழங்க முடியும் என்ற நிலை தற்போது நிலவுகிறது.
 ஊழியர்களின் வருகைக் குறைவால் குப்பைகள் ஆங்காங்கே தேங்கி சுகாதார சீர்கேட்டோடு, நோய்த் தொற்று ஏற்படும் முன் போர்க்கால அடிப்படையில் கணினியைக் கையாளும் திறமையான அலுவலர்களை கொண்டு இரவு, பகலாகப் பயிற்சியளித்து ஊராட்சியின் விரைவான நிர்வாகச் செயல்பாடுகளுக்கு உறுதியளிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
 - சி. உதயகுமார்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com