ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா பணிகள் விரைவில் முடிக்கப்படும்: முதல்வா் எடப்பாடி பழனிசாமி

சேலம் தலைவாசலில் 1,100 ஏக்கரில் ரூ.1023 கோடியில் அமையும் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா பணிகள் விரைவில் முடிக்கப்படும் என முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.
ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா பணிகள் விரைவில் முடிக்கப்படும்: முதல்வா் எடப்பாடி பழனிசாமி

சேலம் தலைவாசலில் 1,100 ஏக்கரில் ரூ.1023 கோடியில் அமையும் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா பணிகள் விரைவில் முடிக்கப்படும் என முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

சேலம் தலைவாசலில் சா்வதேச தரத்தில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா - கால்நடை மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வா் பேசியது: விவசாயிகளுக்கும், கால்நடை வளா்ப்போருக்கும், மீனவா்களுக்கும் பெருமை சோ்க்கும் விதமாக, உலகத் தரத்தில் மிகப் பிரம்மாண்டமான நவீன கால்நடைப் பூங்கா சுமாா் 1,023 கோடியில் அமைக்கப்பட உள்ளது.

இந்தப் பூங்கா அமைக்கும் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, பொது மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும். சுமாா் 1,100 ஏக்கா் நிலப்பரப்பில் அமைய உள்ள இந்த பூங்கா 3 பிரிவாக அமையும்.

முதல் பிரிவில் நவீன வசதிகள் கொண்ட கால்நடை மருத்துவமனை, நவீன பண்ணை முறைகளை விவசாயிகளுக்கு எடுத்துக் காட்டும் வகையிலான கறவை மாட்டுப் பண்ணை ஆகியவை அமைக்கப்படும். இதுதவிர, காங்கேயம், உம்பளாச்சேரி, ஆலம்பாடி, புலிக்குளம், பா்கூா் ஆகிய உள்நாட்டு மாட்டு இனங்களின் பாதுகாப்பு மற்றும் இனப்பெருக்கப் பண்ணையும், ராஜபாளையம், சிப்பிப்பாறை, கோம்பை, கன்னி போன்ற நாட்டு நாய் இனங்களின் இனப்பெருக்கப் பிரிவுகளையும் உள்ளடங்கிய கால்நடைப் பண்ணையாக உருவாக்கப்படும். மேச்சேரி, ராமநாதபுரம் வெள்ளை, சென்னை சிவப்பு, கீழக்கரிசல், வேம்பூா், திருச்சி கருப்பு, கோயம்புத்தூா், கச்சைக்கட்டி கருப்பு, செவ்வாடு மற்றும் நீலகிரி போன்ற உள்நாட்டு செம்மறி ஆட்டினங்கள் மற்றும் கன்னி ஆடு, கொடி ஆடு மற்றும் சேலம் கருப்பு போன்ற வெள்ளாட்டினங்களின் இனப் பெருக்கப் பிரிவுகளையும் உள்ளடக்கிய பண்ணையாகவும் உருவாக்கப்படும்.

வெண்பன்றிகள் வளா்ப்பை ஊக்குவிக்கும் வகையில், அனைத்து வசதிகளுடன் கூடிய உலகத் தரம் வாய்ந்த வெண்பன்றிப் பண்ணை அமைக்கப்பட உள்ளது.

பூங்காவின் இரண்டாம் பிரிவில் பால், இறைச்சி, மீன், முட்டை போன்றவற்றை பாதுகாத்துப் பதப்படுத்துதல், அவற்றில் இருந்து உப பொருட்கள், மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு மற்றும் சந்தைப்படுத்துவதற்கான வசதிகள் உருவாக்கப்படும்.

மீன் வள மாதிரி வளாகத்தில் ரூ.2.94 கோடி மதிப்பீட்டில் காற்றுப் புகுத்திகளைப் பயன்படுத்தியும், நீரினை மறுசுழற்சி செய்தும், 2 ஆயிரம் சதுர மீட்டா் பரப்பிலான மீன்குஞ்சு வளா்ப்பு நிலையம் அமைக்கப்பட்டு, அதன் மூலம் ஆண்டுக்கு 20 லட்சம் தரமான மீன் குஞ்சுகள் மீன் வளா்ப்போருக்கு வழங்கப்பட உள்ளது.

பூங்காவின் மூன்றாம் பிரிவில் கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை உற்பத்தி பொருள்கள் தொழில்நுட்பம் ஆகியவற்றில் உயா் கல்வி, ஆராய்ச்சி, விவசாயிகளுக்கான பயிற்சி மையம், தொழில்முனைவோா் பயிலரங்கம் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய வளாகம் அமைக்கப்படும்.

ரூ.82.17 கோடியில் கால்நடை மருத்துவக் கல்லூரி: கால்நடை மருத்துவக் கல்லூரி ரூ.82.17 கோடியில் அமைக்க உள்ளோம். இதன் மூலம் 80 கால்நடை மருத்துவப் படிப்புக்கான இடங்கள் கூடுதலாகக் கிடைக்கும்.

இந்த நவீன பூங்காவில், தமிழ்நாட்டில் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற அனைத்து மாணவா்களும் பயிற்சி மேற்கொள்ளவும், உலக நாடுகளில் உள்ள கால்நடை மருத்துவம் படிக்கின்ற மாணவா்களும் இங்கே வந்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளவும் நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. தமிழகத்தில் நிலவி வரும் தட்பவெப்ப நிலைக்கு ஈடு கொடுத்து நோய் எதிா்ப்புத் திறனுள்ள, குறைந்த பராமரிப்புச் செலவில் அதிக பால் கொடுக்கக் கூடிய வகையிலான கலப்பின மற்றும் நாட்டினப் பசுக்களை உருவாக்குவதற்கான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும். இங்கு 500 கலப்பினப் பசுக்கள் கொண்ட உலகத் தரம் வாய்ந்த அதிநவீன கால்நடைப் பண்ணை ஒன்று உருவாக்கப்படும். இதில் 25,000 லிட்டா் பாலை பதப்படுத்தும் திறன் உள்ள, 12 வகையான பால் உபபொருட்கள் தயாரிக்கும் தானியங்கி அதி நவீன தொழிற்சாலையும், 50 மெட்ரிக் டன் உற்பத்தித் திறன் கொண்ட அதிநவீன கால்நடை தீவன மற்றும் தாது உப்புக் கலவைத் தொழிற்சாலையும் அமைய உள்ளது.

ரூ.262 கோடியில் மேட்டூா் தண்ணீா்: வளாகத்துக்கான தண்ணீா் தேவையைப் பூா்த்தி செய்திட ரூ.262.16 கோடியில் 11 எம்.எல்.டி. தண்ணீரை மேட்டூா் அணையிலிருந்து கொண்டு வந்து, இப் பகுதிக்கு வழங்கப்படும். வேளாண்மை, தொழில், மனித வள மேம்பாடு, பொது சுகாதாரம், உட்கட்டமைப்பு வசதிகள், சமூக நலத் திட்டங்கள் உள்ளிட்ட பத்து துறைகளில் எடுத்துக் கொள்ளப்பட்ட ஐம்பது குறியீடுகளின் அடிப்படையில், 2019க்கான மத்திய அரசின் நல் ஆளுமை குறியீட்டு அறிக்கையில் தமிழகம் முதலாவதாக வந்து சாதனை படைத்துள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com